சென்னை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த முடிவை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில் சுரங்க ஏலத்தின் போது தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கூறியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன. இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன. தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன.
அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்பட்டால் அங்குள்ள பல்லுயிர் வாழிடங்களும், புராதனப் பெருமை மிக்க சின்னங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விடும் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடிய நிலையி, அதில் சுரங்கதிற்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்தார். இதனையடுத்து சட்டசபையில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதை அடுத்து டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமையும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்,” பொருளாதார வளர்ச்சிக்காக கனிமங்களை ஏலம் விடுவது மத்திய அரசின் கனிமத் துறையின் பணி. கூட்டு உரிமம், கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விட கையெழுத்திடுவது மாநில அரசால் செய்யப்படுகிறது. இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
பல்லுயிர் பகுதிகளை தவிர்த்து விட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்யலாம். கனிம சுரங்க ஏலம் விட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மறுபரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2024 பிப்ரவரியில் டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் விடும் பணிகள் தொடங்கியது முதல் தமிழகம் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. டங்ஸ்டன் ஏலம் தொடர்பாக 2023 டிசம்பர் 6ஆம் தேதியில் தமிழக அரசின் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், 2024 நவம்பர் 7ஆம் தேதி ஏழமுடிவை அறிவிக்கும் வரை தமிழகத்திடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.