வளைத்து வளைத்து சோதிக்கும் வருமான வரித்துறை.. எ.வ வேலு !

post-img

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நீடிக்கிறது. சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கோவை, கரூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் 80 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.


எ.வ.வேலு: தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கவனித்துவரும் பொதுப்பணித் துறையின்கீழ் பல்வேறு அரசு அலுவலக கட்டிடங்கள், அரசு மருத்துவமனைகள், குடியிருப்புகள், பள்ளி வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை துறை சார்பில் பாலங்கள், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தங்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.


வரி ஏய்ப்பு: இந்த நிலையில், ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், ஆதாய நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்து, வரிஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.


இதுதொடர்பாக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தகவல்களை திரட்டி ஆய்வு மேற்கொண்டனர்.
வருமானவரி சோதனை: இதில்,வரிஏய்ப்பு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் மட்டும் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது.
எங்கெங்கு சோதனை: திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் வேலு நகரில் சுமார் 200 ஏக்கரில் உள்ள அருணை கல்வி நிறுவன வளாகத்தில் அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, ஃபார்மஸி கல்லூரி, செவிலியர் கல்லூரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. சர்வதேச நட்சத்திர விடுதிக்கு இணையாக பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தங்கும் விருந்தினர் மாளிகை மற்றும் எ.வ.வேலுவின் வீடும்இந்த வளாகத்தில் உள்ளது. திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, கிரானைட் குவாரி, பல நூறு ஏக்கர் விவசாய நிலங்களும் அவருக்கு உள்ளன.


தனியாத பதற்றம்: நேற்று காலை சுமார் 6 மணி அளவில் அமைச்சர் எ.வ.வேலு அவரது வீட்டில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 25 கார், வேன்களில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன், 75க்கும் மேற்பட்டவருமான வரித் துறை அதிகாரிகள், அவரது கல்வி நிறுவன வளாகத்தில் நுழைந்தனர். பின்னர் தனித்தனியாக பிரிந்து, அறக்கட்டளை அலுவலகம், பன்னாட்டு பள்ளி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, வீடு மற்றும் விருந்தினர் மாளிகை என 6 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


வளைத்து வளைத்து சோதனை: கணினிகளில் உள்ள தரவுகள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர். இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு, அவரது மனைவி ஜீவா வேலு, மகன்குமரன் மற்றும் இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தமிழகத்தில் எ.வ.வேலு, அவருக்கு நெருக்கமானவர்கள், ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


இதில் பல டிஜிட்டல் தரவுகள், முக்கிய ஆவணங்கள்சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனைமுழுமையாக முடிந்த பிறகே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தெரிவிக்க முடியும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காசாகிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் 24 மணிநேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதால் சென்னை, கோவை, கரூரில் உள்ள பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் இடையே பதற்றம் தணியாமல் உள்ளது.

 

Related Post