தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய படங்களை ரொம்பவே நம்பியிருந்தார் ரஜினிகாந்த். ஆனால் அவர் எதிர்பார்க்காதபடி படங்கள் படுதோல்வியை சந்தித்தன. தோல்வி மட்டுமின்றி எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை. இதனால் உடனடியாக ஒரு கம்பேக் கொடுத்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சிக்கலாகிவிடும் என யோசித்த ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார்.
ஜெயிலர்:
பீஸ்ட் படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோதே நெல்சன் திலீப்குமார் ரஜினியை இயக்குவது உறுதியானது. டாக்டர் படம் ரஜினியின் ஃபேவரைட் படங்களில் ஒன்று. இதன் காரணமாக அவரது குட் புக்கில் நெல்சன் அப்போதே இணைந்துவிட்டார். அதனையடுத்துதான் தன்னுடைய கம்பேக்குக்கு நெல்சன் உதவியாக இருப்பார் என்று நம்பியிருக்கிறார் ரஜினிகாந்த். படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
பான் இந்தியா:
ரஜினியை தவிர்த்து மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், வசந்த் ரவி, யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா என பெரும் நட்சத்திர பட்டாளமே திரைப்படத்தில் இருக்கிறது. பான் இந்தியா படமகா ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகும் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்துள்ளன என்பது அனைவருமே அறிந்தது.
ட்ரெய்லர்:
படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. எதிர்பார்த்தபடியே ரஜினியை வைத்து சிறப்பான சம்பவத்தை செய்திருக்கிறார் நெல்சன். கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகி கோலிவுட்டில் ரஜினி தரமான கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு பத்தாம் தேதிக்கு காத்திருக்கின்றனர். ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி நெல்சன் ஸ்டைல் காமெடியும் படத்தில் இருக்கும் என்பதால் முழுமையான கமர்ஷியல் பேக்கேஜாக படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் விமர்சனம்:
இந்நிலையில் ஜெயிலர் படத்தை அனிருத் பார்த்துவிட்டார். அதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஜெயிலர் என குறிப்பிட்டு தீப்பொறி எமோஜி, சாம்பியன் கோப்பை எமோஜி உள்ளிட்டவற்றை பதிவிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவலில் இருக்கிறது என்பதை அனிருத் சொல்லிவிட்டார். எனவே அலப்பறைய கெளப்புறோம் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
முன்னதாக நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பரான அனிருத் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியபோது, இந்த முறை குறி தப்பாது நெல்சா என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அனிருத் இப்படி ட்வீட் செய்திருப்பதால் உண்மையில் நெல்சனின் குறி தப்பவில்லை போல; பீஸ்ட்டில் வாங்கியதை வட்டியும் முதலுமாக ஜெயிலரில் கொடுத்திருப்பார் என திரைத்துறையில் பேசிவருகின்றனர்.