சென்னை: சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.. டிராபிக் சிக்கலை தீர்க்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும், நெரிசலை முழுமையாக குறைக்க முடிவதில்லை.
எனவேதான், வாகன நெரிசல் அதிகம் இருக்கும் இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.. மற்றொரு பக்கம் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பணிகளாலும், போக்குவரத்து நெரிசல் மேலும் கடினமாகிவிடுகிறது.
அதிலும், மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏராளமான ஐடி கம்பெனிகள் உள்ளதால், ஓஎம்ஆர் ரோட்டில் இரவும், பகலும் டிராபிக் இருந்தவாறே உள்ளது.. இந்த மத்திய கைலாஷ் சந்திப்பிலும் மேம்பாலம் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. சென்னை கோட்டூர்புரம், மத்திய கைலாஷ் சந்திப்பு, ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், இந்த பணிகளை முன்னிறுத்தி, நேற்று அதாவது டிசம்பர் 22 முதல் சோதனை ஓட்டம் அடிப்படையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், "கோட்டூர்புரம் மத்திய கைலாஷ் சந்திப்பு ஓ.எம்.ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இப்பிரச்சனைக்கு தீர்வாக சோதனை ஓட்டம் அடிப்படையில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் அமுல்படுத்தப்படும். அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் ஓ.எம்.ஆர் சாலை நோக்கி திருப்பி விடப்படும்.
அந்த வாகனங்கள் 400 மீட்டர் தூரம் சென்று தரமணி சி.பி.டி பாலிடெக்னிக் கல்லூரியின் முன்புறம் 'U' திருப்பம் அனுமதிக்கப்பட்டு, மத்திய கைலாஷ் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடைய அனுமதிக்கப்படும். கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ஓ.எம்.ஆர் நோக்கி வரும் வாகனங்கள் தற்போது போலவே எந்த மாற்றும் இல்லாமல் செல்லலாம்.
ஓ.எம்.ஆர்-ல் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகர பேருந்துகள் மத்திய கைலாஷ் கோயிலின் பின்புறத்தில் நியமிக்கப்பட்ட தனிப்பாதையில் பயணிகளை இறக்கிவிட அனுமதிக்கப்படும். இந்த போக்குவரத்து மாற்றமானது மத்திய கைலாஷ் சந்திப்பில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதோடு, சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்யும்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.