பிள்ளைகளின் சொத்தில் பெற்றோருக்கு உரிமை இருக்கா? ஆணுக்கு ஒரு ரூல்ஸ்.. பெண்ணுக்கு இன்னொரு ரூல்ஸ்!

post-img
டெல்லி: பெற்றோரின் சொத்தில் குழந்தைகளுக்குப் பங்கு எந்தளவுக்கு இருக்கிறது என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்கும். அதேநேரம், குழந்தைகளின் சொத்தில் பெற்றோருக்கு உள்ள உரிமை குறித்து இங்கு யாருக்கும் தெரிவதில்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். நமது நாட்டில் பரம்பரை சொத்துகளில் மகன், மகள் என இருவருக்குமே சம அளவுக்கு உரிமை இருக்கிறது. இதன் சட்டங்கள் எளிமையானது. அது தொடர்பாக நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் சொத்துகளில் பெற்றோருக்கு உரிமை இருக்கிறதா என்று பார்த்தால்.. அதில் சிக்கல்கள் உள்ளன. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். வாரிசு உரிமை: இது தொடர்பான விதிகள் குழந்தையின் பாலினம் உட்பட பல்வேறு காரணங்களைப் பொறுத்து மாறுபடும். இந்திய வாரிசு உரிமைச் சட்டத்தின் கீழ், குறிப்பாக இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட முக்கியத் திருத்தங்களைப் பின்பற்றிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சொத்துக்களில் உரிமைகளைப் பெற சில சட்டங்கள் உள்ளன. பொதுவாக, குழந்தைகளின் சொத்துக்கள் தானாகப் பெற்றோர்களுக்கு வந்துவிடாது. இருப்பினும், அவர்கள் சில குறிப்பிட்ட சூழல்களில் குழந்தைகளின் சொத்துகளைப் பெற்றோரால் உரிமை கோர முடியும். கடந்த 2005ம் ஆண்டு திருத்தப்பட்ட இந்து வாரிசு உரிமைச் சட்டம், இதற்கான நிபந்தனைகளைத் தெளிவாக இருக்கிறது. பெற்றோருக்கு எப்போது செல்லும்: இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின் கீழ் திருமணமாகாத நபர், உயில் எதையும் எழுதி வைக்காமல், எதிர்பாராத விதமாக திடீரென உயிரிழந்துவிட்டால் வாரிசு உரிமை பெற்றோருக்கே செல்கிறது. அதேநேரம் பெற்றோர்கள் சொத்தின் முழு உரிமையைப் பெறுவதில்லை. அதாவது தாய் மற்றும் தந்தை இருவருக்கும் தனித்தனி மற்றும் தனித்துவமான உரிமைகள் பிரித்து வழங்கப்படுகின்றன. அதாவது சொத்துகளின் உரிமை தாய்- தந்தை இருவருக்கும் பிரித்து வழங்கப்படும். அதேநேரம் ஒருவருக்கு மட்டும் முழு உரிமை வழங்கப்படாது. திருணமாகாத நபர் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் போது, முதல் வாரிசாகத் தாய் தான் கருதப்படுவார் என்று இந்து வாரிசு உரிமைச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. தாய்க்குப் பிறகு தந்தை இரண்டாவது வாரிசாகக் கருதப்படுகிறார். தாய் உயிருடன் இல்லை அல்லது சில காரணங்களால் உரிமை கோர முடியாத நிலையில் இருந்தால், தந்தைக்கு அந்த உரிமைகள் செல்லும். ஆண்- பெண் வேறுபாடு: அதேநேரம் இந்த சட்டம் பாலினத்தைப் பொறுத்தும் கொஞ்சம் மாறுபடும். அது குறித்து நாம் பார்க்கலாம். உயிரிழந்த நபர் ஆணாக இருந்தால் (உயில் இல்லை என்றால்), தாய் முதல் வாரிசாகவும் தந்தை இரண்டாவது வாரிசாகவும் இருப்பார். குடும்பத்தின் மற்றவர்களுக்கும் சம அளவு உரிமை இருக்கும். அதேநேரம் தாய் உயிருடன் இல்லை என்றால் தந்தை மற்றும் மற்ற வாரிசுகளுடன் சொத்து சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படும். ஆணுக்குத் திருமணமாகி இருந்தாலும்.. திருமணமாகவில்லை என்றாலும் இதே ரூல்ஸ்தான். பெண் திருமணத்திற்கு முன்பு எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் பெற்றோரே முதல் வாரிசாகக் கருதப்படுவார்கள். அதேநேரம் உயிரிழந்தது பெண்ணாக இருந்தால்.. வாரிசு உரிமை அந்த பெண்ணின் பிள்ளைகளுக்கே செல்லும்.. அதன் பிறகு அந்த பெண்ணின் கணவருக்குச் செல்லும். இறந்த பெண்ணின் பெற்றோர் பொதுவாகச் சொத்தை கடைசியாக மட்டுமே பெறுவார்கள். அதாவது குழந்தைகளும் கணவரும் உரிமை கோரிய பிறகு பெற்றாரால் உரிமை கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post