டெல்லி: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி எதற்கெல்லாம் அதிகமாகிறது? எதற்கெல்லாம் வரி விலக்கு கிடைக்கும்?
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் 55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, சிலவற்றிற்கு வரி குறைப்பும், சிலவற்றிற்கு ஜிஎஸ்டி வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
1. செறிவூட்டப்பட்ட அரிசி மீதான வரியை 5 சதவீதம் ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. முன்பு இதன் மீதான வரி 18% ஆக இருந்தது.
2. விவசாயிகள் பச்சை மிளகு, காய்ந்த மிளகு, உலர் திராட்சைகளை விற்பனை செய்யும்போது எந்தவிதமான ஜிஎஸ்டி வரியும் இல்லை. அவற்றை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்யும்போது அவற்றுக்கு வரி விதிப்பு உண்டு.
3. வங்கிக் கடன் பெற்றவர்கள் விதிகளை பூர்த்தி செய்யாவிடில் அதற்கு விதிக்கப்படும் அபராதம் மீது ஜிஎஸ்டி கிடையாது.
4. ஜீன் தெரபி சிகிச்சைக்கு முற்றிலும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
5. அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படுகிறது.
6. நீண்ட தூர மேற்பரப்பு ஏவுகணை (LR-SAM) அமைப்புக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.
7. வணிக ஏற்றுமதியாளர்களுக்கான இழப்பீட்டு செஸ் 0.1% ஆக குறைக்கப்பட்டது.
8. 50 சதவீதத்துக்கும் அதிகமாக சாம்பல் கண்டெண்ட் கொண்ட ஆட்டோக்ளேவ்ட் ஏரேட்டட் கான்கிரீட் (AAC) பிளாக்குகளுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12% ஆக குறைக்கப்படுகிறது.
பாப்கார்ன்களின் வரி விகிதங்களை ஜிஎஸ்டி கவுன்சில் தெளிவுபடுத்தியுள்ளது. முன்கூட்டியே பேக் செய்யப்பட்டோ அல்லது லேபில் இடப்படாமலோ, உப்பு மற்றும் மசாலா கலந்து வழங்கப்படும் பாப்கார்ன்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
முன்பே பேக் செய்யப்பட்டு லேபில் ஒட்டப்பட்ட பாப்கார்ன்களுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.
ஸ்வீட் கேரமல் பாப்கார்ன் போன்ற, அதாவது பாப்கார்னின் இயல்பான சுவையை சர்க்கரை, கேரமல் சேர்த்து மாற்றி சுவை கூட்டியிருந்தால், அந்த வகை பாப்கார்ன்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படும்.
மேலும், இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் கடிகாரங்கள், பேனா, ஷூ மற்றும் ஆடைகள் போன்றவற்றுக்கான வரிகளை உயர்த்துவது உள்ளிட்ட 148 பொருள்களுக்கான வரி விகிதத்தை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கு (Sin goods) 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என்ற நான்கடுக்கு வரி விகிதங்களுக்கு பதிலாக ஒரே மாதிரி 35 சதவீதம் வரி விகிதத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் உட்பட அனைத்து பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு (பெட்ரோல் வாகனங்களின் இயந்திர திறன் 1200 சிசி, டீசல் வாகனங்களுக்கு இயந்திர திறன் 1500 சிசி மற்றும் எஸ்யுவி) 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. தற்போது இது 18 சதவீதமாக உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விகிதம் வாகனத்தை விற்பனை செய்பவரின் மார்ஜின் தொகைக்கு மட்டுமே பொருந்தும். அதாவது வாங்கிய விலைக்கும் விற்கும்போது இருக்கும் விலைக்கும் உள்ள வித்தியாச தொகைக்கு மட்டுமே இந்த வரி பொருந்தும்.
மேலும், இந்தக் கூட்டத்தில் ஆயுள், மருத்துவ காப்பீடு தவணைக்கு வரி விலக்கு அளிப்பது அல்லது வரியை குறைப்பது குறித்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான ஜிஎஸ்டி மீதான அமைச்சர்கள் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு தவணைக்கு ஜிஎஸ்டி விலக்கு வேண்டும் என வலியுறுத்தினர். சில உறுப்பினர்கள் இப்போது உள்ள 18% வரியை 5% ஆக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.