'விடுதலை 2' படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி.. நாளை 9 மணிக்கு முதல் ஷோ!

post-img
சென்னை: விடுதலை - 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள விடுதலை-2' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், நாளை ஒருநாள் மட்டும் காலை 9 மணி முதல் இரவு 2 மணி வரை மொத்தமாக 5 காட்சிகளை திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அதன் அடுத்த பாகமான 'விடுதலை 2' திரைப்படம் நாளை (டிசம்பர் 20) திரைக்கு வருகிறது. இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது விடுதலை 2. விடுதலை முதல் பாகம், சூரியைச் சுற்றி கதை அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இரண்டாம் பாகமானது விஜய் சேதுபதியை சுற்றி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. விடுதலை 2 படத்தில் வன்முறை காட்சிகள் காரணமாக ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு. இந்நிலையில், இப்படத்தில் 8 நிமிடங்களை கட் செய்துள்ளது படக்குழு. விடுதலை பாகம் 2 படத்தின் மொத்த நீளம் 2 மணிநேரம் 52 நிமிடங்களாக இருந்த நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பே 8 நிமிடங்களை குறைத்துள்ளனர். இது தொடர்பாக வெற்றிமாறன் பேசும் வீடியோவை விஜய் சேதுபதி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், விடுதலை 2 படத்திற்கு சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. வெற்றிமாறனின் அசுரன் உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்த நிலையில், தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாமலும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், திரையங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன், இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தார் கோரிய "விடுதலை 2" என்ற தமிழ் திரைப்படத்திற்கு 20.12.2024 அன்று காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சியினை திரையிட அனுமதி வழங்குவது குறித்து, உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, அரசளவில் முடிவெடுக்கலாம் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post