சென்னை: சென்னை திருமங்கலம் பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த சாந்தி மனதளவில் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், தனது தாயார் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். ஆனால் திரும்பவரவே இல்லை..
திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள் குழந்தை பிறக்கவில்லை என்றால், சொந்தக்காரர்கள், உறவினர்கள் கணவன் மனைவி இருவரையும் பார்த்த உடன் கேட்கும் முதல் கேள்வி.. என்னங்க வீட்டில் விஷேசம் இல்லையா? என்பது தான்.. பார்க்கும் உறவுகள் அத்தனையும் இன்னும் குழந்தைக்கு தயாராகவில்லை என்று ஆரம்பிப்பார்கள். இறுதியில் குழந்தை பிறக்காததற்கு யார் காரணம் என்பதை மருத்துவமனையில் சென்று சோதித்து பாருங்கள் என்பார்கள். அவர்களின் கேள்வியே பலருக்கு பயத்தையும் வலியையும் ஏற்படுத்தும்..
அடுத்ததாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளை தாண்டி குழந்தை பிறக்கவில்லை பெற்றோரே என்னாச்சு கேள்விகளால் துளைக்கும் சம்பவங்கள் நடக்கிறது. ஒரு வேளை கணவன் அல்லது மனைவி இந்த விவகாரத்தில் மனம் உடைந்து போனால் அதில் இருந்து மீள முடியாமல் தவிப்பார்கள். அவர்களை ஆறுதல் கூறி தேற்றுவது முக்கியம். மாறாக அவர்களை பரிதாபமாக பார்ப்பதோ அல்லதுஅவர்களை ஏக்கத்திற்கு உள்ளாக்குவதோ சரியானது அல்ல. ஏனெனில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் சிலர் வாழ்க்கையில் தவறான முடிவுகளையும் எடுக்கிறார்கள். அப்படித்தான் சென்னை திருமங்கலத்தில் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
சென்னை திருமங்கலம், பாடி குப்பம் பகுதியை சேர்ந்த 32 வயதாகும் கார்த்திகேயன், தச்சு வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை தேவராஜ் தெருவை சேர்ந்த 27 வயதாகும் சாந்தி என்பவருடன் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இதனால் கணவன்-மனைவி இருவரும் பல மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தனர். இருப்பினும் எந்த பயனும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. குழந்தை இல்லாத ஏக்கத்தில் சாந்தி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர், மனநல டாக்டரிடம் சிகிச்சை பெற்று தொடர்ந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்திருந்தார் என கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் சாந்தியின் தாயார் உடல்நலக் குறைவால் காலமானார். ஏற்கனவே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த சாந்திக்கு தாய் உயிரிழந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அவரது உடல் நிலையும் மனநிலையும் மோசமானதாக கூறப்படுகிறது.
இதனால் சாந்தி சரியாக மாத்திரைகளை சாப்பிடாமல் இருந்து வந்தாராம்.. சில தினங்களுக்கு முன்பு சாந்தி, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் அறையில் சாந்தி திடீரென தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)