மகளிர் உரிமை தொகை: நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் அப்ளை பண்ணுவது எப்படி? தமிழக அரசு

post-img

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டதில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் வரும் 18 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான நடைமுறை குறித்த தகவலும் வெளியாகியிருக்கிறது.


கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், மாதம் தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் மிகவும் கவனம் பெற்ற அறிவிப்பாக இது இருந்தது. திமுக ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதை வைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை விமர்சிக்க தொடங்கின.


மக்களும் இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணா பிறந்தநாளின்போது தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.


இதன்படி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆயிரம் ரூபாயை வங்கி கணக்கில் செலுத்த முடியாது என்பதால் இந்த திட்டம் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதி வாய்ந்த 1 கோடி குடும்ப தலைவிகள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.


எனினும் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி வளாகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மேடையில் 13 பெண்களுக்கு இந்த திட்டத்துக்கான ஏ.டி.எம். அட்டையை முதல்வர் வழங்கினார்.


மு.க.ஸ்டாலினும், அந்தந்த வங்கிகளை சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து இந்த அட்டையை வழங்கினார்கள். முன்னதாக இந்த திட்டம் தொடர்பாக 5 நிமிடங்கள் அடங்கிய குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனிடையே நேற்று தொடங்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 18-ஆம் தேதிக்குள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இனி வரக்கூடிய ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர்களுக்கு வங்கிக் கணக்கில் ரூபாய் ஆயிரம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டோர் 18 முதல் விண்ணப்பிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இ சேவை மூலமாக மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும்தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுகுள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட 56.60 லட்சம் பேருக்கு காரணங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் குறுஞ்செய்தி அனுப்படும் எனவும் நிராகரிக்கப்படதன் காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் கோட்டாட்சியர் அலுவலங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post