சேலமே துள்ளுதே.. பூரிப்பில் எகிறி எகிறி குதிக்கும் "ஜவ்வரிசி

post-img

சேலம்: நம்முடைய சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது.. இதற்கான சான்றிதழும் வழங்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டமே மகிழ்ச்சியில் துள்ளுகிறது.
புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளுக்குரிய மிகப்பெரிய அங்கீகாரமாகும்.. ஒரு மாநிலத்தில் உள்ள பாரம்பரியமிக்க பொருளுக்கு, புவிசார் குறியீடு பெறுவது மிகவும் பெருமைப்படக்கூடிய விஷயமுமாகும்.
அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பு, ஜடேரி நாமகட்டி, செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்திருந்தது.
சேலம் மகிழ்ச்சி: இப்போது, சேலம் ஜவ்வரிசிக்கும் இதே அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஜவ்வரிசியானது வடமாநில மக்களால் புனிதமிக்க உணவு பொருளாக கருதப்படுகிறது... இந்த ஜவ்வரிசி பெரும்பாலும் மிகமுக்கியமான நவராத்திரி, துர்கா பூஜா போன்ற திருவிழா காலங்களில் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.
இந்தியாவிலேயே ஜவ்வரிசிக்கு என்று ஒரே ஒரு விற்பனை நிலையமாக சேகோசர்வ் சங்கம் செயல்பட்டு வருகிறது... கிட்டத்தட்ட சேகோ சர்வில் 374 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில் கூட்டுறவு சங்கம் இதுவாகும்.. இதன் மூலம் கொண்டு வரப்படும் ஜவ்வரிசிக்குதான் தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது..
மிகப்பெரிய அங்கீகாரம்: இந்த அங்கீகாரத்தினால், இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். விற்பனை செய்ய உலக நாடுகள் அங்கீகாரமும் வழங்கும். அதுமட்டுமல்ல, இதனால், மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலையும் கிடைக்கும்.. அத்துடன், ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் மதிப்பும் உயரும்..
அத்துடன், வெளிநாடுகளுக்கு ஜவ்வரிசியின் ஏற்றுமதியும் பெருகும். இதனால் இந்திய பொருளாதாரமும் மற்றும் உலக பொருளாதாரமும் மேம்படும். இந்த குறியீடு 10 வருடங்களுக்கு செல்லும்... அதற்கு பிறகு, புவிசார் குறியீட்டை புதுப்பித்தும் கொள்ளலாம்.. புவிசார் குறியீடு: சேலம் சேகோ (ஜவ்வரிசி) என்ற புவிசார் குறியீட்டு சான்றிதழ் பெறும் விழா சேகோ சர்வ் சங்கத்தில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.. இந்த விழாவில், தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் கண்காணிப்பு அலுவலர் சஞ்சய் காந்தி புவிசார் குறியீடு சான்றிதழை வழங்கினார்.
விழாவில் சேகோசர்வ் செயலாட்சியர் லலித்ஆதித்ய நீலம் உள்பட சேகோ சர்வ் அதிகாரிகள், ஜவ்வரிசி, ஸ்டார்ச் வியாபாரிகள், மரவள்ளிக்கிழங்கு வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலெக்டர் பேசும்போது, "சேகோசர்வ் நம்முடைய நாட்டிலேயே முதன்முதலாக, மரவள்ளிக்கிழங்கிலிருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் பொருட்களின் விற்பனைக்காக 1981ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தொழிற்கூட்டுறவு சங்கமாகும்.சேலம் சேகோசர்வில் 2.17 லட்சம் மூட்டைகள் அடுக்கும் வசதியுள்ளது. மின்னணு ஏலவசதி, உறுப்பினர்களுக்கு கடன்வசதி, சந்தை வாய்ப்பு வசதி, ஆய்வக வசதி ஆகியவை ஏற்படுத்தி தரப்படுகிறது.
மரவள்ளிக்கிழங்கு: 2022-23ம் ஆண்டு மட்டும், 4 கோடியே 20 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது. தமிழகத்தில் மட்டுமே, 90 சதவீதம் ஜவ்வரிசி, மரவள்ளிக்கிழங்கிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்போது, தமிழகத்தில் சுமார் 60 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.. அந்த வகையில் தமிழகத்தில் மரவள்ளிகிழங்கிலிருந்து உற்பத்தியாகும் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு பெற்றது மிகவும் பெருமைப்படக்கூடியது. இதனால் உலகளவில் சேலம் ஜவ்வரிசிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மரவள்ளி பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்.
ஸ்டார்ச் மூட்டைகள்: ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து உற்பத்தியாகும் பல்வேறு வகை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் மதிப்பும் அதிகரிக்கும். சங்க உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்களை சேகோசர்வ் சங்கத்திற்கு மட்டுமே அனுப்ப வேண்டும். வியாபாரிகளும் ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மூட்டைகளை சேகோசர்வ் சங்கத்தின் மூலமே கொள்முதல் செய்து பயன் பெறலாம் என்றார் மாவட்ட கலெக்டர்.

Related Post