பெங்களூர்: பெங்களூர் கம்ப்யூட்டர் என்ஜினியர் சுபாஷுக்கு ஆதரவாக மொத்த ஐடி ஊழியர்களும் குரல் எழுப்பி வருகிறார்கள். அதுல் சுபாஷுக்கு ஆதரவாகவும், ஆண்களை பாதுகாக்க சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பினார்கள். இந்நிலையில் பெங்களூர் கம்ப்யூட்டர் என்ஜினியரின் தப்பி ஓடிய மனைவி, மாமியார் உள்பட 4 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்கு ஆஜராகும்படி வீட்டில் போலீசார் நோட்டீஸ் ஒட்டினார்கள்.
பெங்களூர் மாரத்தஹள்ளி அருகே மஞ்சுநாத் லே-அவுட்டில் வசித்து வந்த 35 வயதாகும் அதுல் சுபாஷ் என்ற கம்ப்யூட்டர் என்ஜினியர் தனியார் ஐடி நிறுவனத்தில் இயக்குனராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த டிசம்பர் 9-ந் தேதி அதுல் சுபாஷ் மனைவி மீது குற்றம்சாட்டிவிட்டு உயிரிழந்தார். உயிரை விடும் முன்பாக 40 பக்க கடிதமும், குடியரசுத் தலைவர், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு இ-மெயில் மூலமாக தன் மீது பொய்யான வரதட்சணை கொடுமை வழக்கு பதிவாகி இருப்பதாகவும், இதில் தனக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்
இந்த விவகாரம் பெங்களூர் மட்டுமின்றி, சென்னை, மும்பை, புனே,ஹைதராபாத், டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் வேலை செய்யும் ஐடி ஊழியர்களையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரைவிட்ட அதுல் சுபாஷுக்கு ஆதரவாகவும், ஆண்களை பாதுகாக்க சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதுல் சுபாஷ் தற்கொலை காரணமாக, அவரது மனைவி நிகிதா, தாய் நிஷா, அண்ணன் அனுராக், உறவினர் சுசில் சிம்பானி ஆகிய 4 பேர் மீதும் மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதுல் சுபாஷ், நிகிதாவின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் ஆகும். அதனால் நிகிதா உள்பட 4 பேரையும் கைது செய்ய மாரத்தஹள்ளி போலீசார் உத்தரபிரதேச மாநிலத்தில் முகாமிட்டிருக்கிறார்கள். இதுகுறித்து பெங்களூரில் நேற்று போலீஸ் கமிஷனர் தயானந்திடம் கேள்வி எழுப்பினார்கள். அப்போது அவர் கூறும் போது, சாப்ட்வேர் என்ஜினியர் அதுல் சுபாஷ் தற்கொலை தொடர்பாக, அவரது மனைவி உள்பட 4 பேர் மீது மாரத்தஹள்ளி போலீசில் வழக்குப்பதிவாகி இருக்கிறது.
தற்கொலைக்கு தூண்டிய விவகாரத்தில் 4 பேரையும் கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மாரத்தஹள்ளியில் இருந்து சென்று தனிப்படை போலீசார் உத்தரபிரதேச மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். அதுல் சுபாஷ் தற்கொலையில் கைது செய்ய சென்ற சமயத்தில் வீட்டில் இருந்து அவர்கள் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டனர். இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி அதுல் சுபாஷ் மனைவி வீட்டு முன்பாக போலீசார் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறார்கள். அவர்கள் வெகு விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த வழக்குக்கு தேவையான சாட்சி, பிற ஆதாரங்களை நாங்கள் திரட்டி வருகிறோம். தற்கொலை செய்த அதுல் சுபாஷ், அவரது குடும்பத்திற்கு நியாயம் பெற்றுக் கொடுப்பது எங்களின் கடமையாகும். அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தீவிர விசாரணை நடந்து வருகிறது" என்றார்.