ஆவின் நெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி! டிச.2 முதல் ஜன.20 வரை மட்டுமே

post-img

சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆவின் மேலாண்மை இயக்குநர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் பொதுமக்கள் தேவையை அறிந்து பல்வேறு வகையான பால் உபபொருட்களான நெய், வெண்ணெய், தயிர், பனீர், ஐஸ்கிரீம் மற்றும் நறுமண பால் வகைகளை 1000க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வித தங்குதடையுமின்றி விற்பனை செய்து வருகிறது.
மேலும் பால் உபபொருட்களின் விலையிலும் தரத்திலும் பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் பண்டிகை காலங்களில் பொதுமக்களிடையே ஆவின் பால் உபபொருட்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
அவ்வகையில் பொதுமக்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ஆவின் நெய்யினை எதிர்வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 02.12.2023 முதல் 20.1.2024 வரை லிட்டர் ஒன்றுக்கு ரூ.50/- தள்ளுபடி செய்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.


எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த அதிரடி தள்ளுபடி விலையில் ஆவின் நெய்யினை பெற்று பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த செப்டம்பர் மாதம், ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை அதிகமாகவும், வெண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.30 முதல் ரூ.50 வரையிலும் ஆவின் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது பண்டிகைக் கால ஆஃபரை அறிவித்து 50 ரூபாய் வரை தள்ளுபடி செய்ய முன் வந்துள்ளது ஆவின் நிர்வாகம். இந்த தள்ளுபடியை ஜனவரி 20ஆம் தேதியோடு முடித்துவிடாமல் தொடர வேண்டும் என்பதே ஆவின் பால் பொருட்கள் உபயோகிப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Related Post