மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும்? ஆர்டிஐ மூலம் வெளியான தகவல்!

post-img

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பணிகள் முடிவடையாததால் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்பது ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
மதுரையில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை நீண்ட கால தாமதம் காரணமாக இந்தத் திட்டம் கடந்த 9 ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு முதல் செங்கல்லை நட்டு வைத்தார்.
ஆனால் அதன் பின்னர் இன்று வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் நடைபெறாமல் இருந்து வருகிறது. மதுரை எய்ம்ஸ் உடன் அறிவிக்கப்பட்ட பிற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு விட்டாலும், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இன்னும் நடைபெறவில்லை.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டு, L&T நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த மே மாதம் கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியது.

இந்த மருத்துவமனைக்காகத் தலைவர், செயல் இயக்குநர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சில குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 33 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எய்ம்ஸ் நிர்வாகத்திற்குக் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
ஆர்டிஐ கேள்விக்கு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக அலுவலரும், சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரும் அளித்துள்ள பதிலில், முதற்கட்டமாக ரூ.1118.35 கோடிக்குக் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமான ஒப்பந்தத்தின்படி தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவுக்கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டிடங்கள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

மதுரை எய்ம்ஸ் கான திட்ட மதிப்பீடு 2021.51 கோடி ஆக நிர்ணயம் செய்யப்பட்டு 33 மாதங்களில் மொத்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நிறைவுற்று வருகின்ற 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post