சென்னை: விஜய் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்திருந்த நிலையில் அவர், இதுவரை விமர்சித்த யாருடனும் சேர்ந்து ஒரே மேடைகளில் நிற்கவில்லையா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விக்கிரவாண்டியில் விஜய் மாநாடு நடத்தும் வரை தமிழக அரசில் களம் என்பது திமுக Vs விஜய் என்றே இருந்தது. அவர் திமுக வாரிசு அரசியலை எதிர்த்துத்தான் களம் காண்கிறார் என்றே பலரும் பேசி வந்தனர். ஆனால், வி.சாலையில் மாநாடு முடிந்த மறுநாளிலிருந்து அது அப்படியே விஜய் Vs விசிக என்று மாறியது. தமிழக வெற்றிக் கழக கொள்கைத் திருவிழா மாநாட்டில் பேசிய விஜய், "பாஜக பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா?" என்று கேட்டிருந்தார். விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆட்சியில் பங்கு என்று விஜய் மாநாட்டுக்கு முன்பாக பேசவும், விஜய் அதையே அப்படியே தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டது பலரையும் சந்தேகத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே விஜய்யை மையமாக வைத்தும் ஆட்சியில் பங்கு என்பதைச் சுட்டிக்காட்டியும் திருமாவளவனை ஊடகங்கள் சுற்றி வளைத்தனர். அவரும் முதலில் விளக்கம் அளித்தார். அதன்பின்னர் திமுக கூட்டணியை இது உடைக்கும் முயற்சி என்றும் நாங்கள் உருவாக்கிய அணியைவிட்டு நாங்கள் வெளியேற வேண்டிய தேவை என்ன வந்தது? என்று கேள்வி கேட்கத் தொடங்கினார்.இந்தச் சர்ச்சைக்கு மத்தியில்தான் விஜய் கலந்து கொள்ளும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவனும் பங்கேற்பதாக இருந்தது. அதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், அவரும் கலந்து கொள்ள இருக்கிறார் எனத் தகவல் கசிந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த விசிக பொதுச்செயலாளர் வன்னி அரசு, "அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என்று திருமாவளவன் கூறவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமே இல்லாமல் அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும், பகவத்கீதையை இன்னொரு கையிலும் வைத்து சமரச 'பாயாசம்' கிண்டுகின்ற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்றுதான் சொன்னார். ஆனால், நூல் வெளியீட்டாளர்கள் திருமாவளவனைப் புறக்கணித்து விட்டுப் 'பாயாசம்தான் வேண்டும்' எனப் போயிருக்கிறார்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இன்று இந்த நூல் வெளியீட்டு சர்ச்சை குறித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், இந்தப் புத்தகத்தில் தனது பேட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விழா கடந்த ஏப்ரல்14- புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் நடைபெறுவதாக முதலில் திட்டமிடப்பட்டது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிடுவதாகவும் நான் பெற்றுக்கொள்வதாகவும் சொல்லப்பட்டது என்றும் விளக்கம் அளித்திருக்கிறார்.
மேற்கொண்டு அவரது அறிக்கையில், "சில மாதங்களுக்குப் பின்னர் முதல்வர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும்; ராகுல்காந்தி அவர்களை அழைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியும்கூட நிறைவேறவில்லை என்றும் தகவல்கள் கிடைத்தன. அதன்பின்னர், நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்க இசைவளித்துள்ளார் என சொல்லப்பட்டது. அவரது கட்சியின் விக்கிரவாண்டி மாநாடு நடைபெறுவதற்கு முன்பு அவ்வாறு சொல்லப்பட்டது. நடிகர் விஜய் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கிறார் என்பது ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. "டிசம்பர்-06, விஜய் - திருமா ஒரே மேடையில்" என தலைப்புச் செய்தி வெளியிட்டு, இதனை சில ஊடகங்கள் பூதாகரப்படுத்தின. ஒரு நூல்வெளியீட்டு விழாவுக்கு அரசியல் சாயம் பூசியது ஒரு நாளேடு.
இந்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஒரே மேடையில் நின்றபோதும் அந்த நாளேடு அப்படித்தான் தலைப்புச் செய்தி வெளியிட்டதா? நான் ஓராண்டுக்கு முன்னரே இசைவளித்துவிட்டேன். விஜய் மாநாட்டு உரைக்கு முன்னர், அவர் வருவதை அறிந்தபோதும்கூட அந்நிகழ்வில் நான் பங்கேற்பதைப் பதிப்பகத்தாரிடம் உறுதி செய்துவிட்டேன். ஆனால், அவரது மாநாட்டு உரைக்குப் பின்னர், 'அவர் நூல் வெளியீட்டு விழா மேடையில் என்ன பேசுவோரோ' என்கிற அச்சத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினேன். அப்போது, "அவர் துளியும் அரசியல் பேசமாட்டார்" என்று சொன்னார்கள்.
ஏன் ஏற்கனவே இசைவளித்த திருமாவளவனை விட்டு விட்டு நிகழ்ச்சியை நடத்திட முடிவெடுத்தது ஏன் என்று யாரும் என்கிற கேள்வியை எழுப்பவில்லை. "விஜய் போதும்; திருமா தேவையில்லை " என்கிற முடிவை நூலை வெளியிடுபவர்களா எப்படி எடுக்க முடிந்தது?அதற்கு என்ன காரணமாக இருக்கமுடியும்? இதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை" என்று பல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
அரசியல் களத்தில் ஒருவர் மாற்றுக் கருத்தை முன்வைப்பதால் அவரது பக்கமே திரும்பக் கூடாது என்ற கலாச்சாரத்தைத் தமிழக அரசியல் மட்டத்தில் அறிமுகம் செய்தவர் திருமாவளவன். அவர் அதைப் பலமுறை கண்டித்திருக்கிறார். ஜனநாயகப் படி அவர் நடந்து கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டி இருக்கிறார். அரசியலில் யாரும் நிரந்தர பகையுடன் இருந்தது இல்லை. ஒரு காலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் நெருக்கமாக இருந்தவர் திருமா. அவருக்கு தமிழ்க்குடி தாங்கி எனப் பெயர் வைத்தவர். அதேபோல் கடந்த காலங்களில் திராவிடம் என்ற கருத்தை எதிர்த்து தமிழ்த் தேசிய களத்தில் பேசியவர் திருமாவளவன். தமிழர், தமிழ்நாடு, தமிழ்த்தேசியம் எனப் பேசியவர். திராவிடம் என்ற கருத்தாக்கத்தை அவரது தாய் மண் பத்திரிகையில் மறுத்து எழுதியவர்.
இன்றைக்கு திராவிடம் என்பது நிலப்பரப்பு. அது ஒரு நாகரிகம் எனப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விமர்சிக்காததா? அவரை கண்டித்து திமுக தீர்மானமே போட்டது. அதேபோன்று தான் ஒரு காலத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி பேசினார். ஜெயலலிதாவுடன் அவர் இருந்தார். பின்னர் ராஜீவ் காங்கிரஸ் எனத் தொடங்கி திமுகவுக்கு வந்தார்.
காங்கிரசை எதிர்த்துப் பேசிய இயக்கம் திமுக. நேருவை விமர்சித்தனர். நேரு திராவிட நாடு கேட்டபோதும் பேசிய வசனங்களை அன்றைய பத்திரிகையைப் படித்தவர்கள் அறிவார்கள். வைகோ திமுக மீது வைக்காத விமர்சனமா? அவர் ஸ்டாலின் மீது வைக்காத குற்றச்சாட்டா? விஜயகாந்த் திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். கட்சித் தொடங்கிய போது தேமுதிகவினால் உங்கள் ஓட்டு வங்கி பாதிக்குமா? என மு. கருணாநிதியிடம் போது 'எங்கள் ஓட்டு வங்கி பாதிக்காது. வேண்டுமானால் விஜயகாந்த் வங்கிக் கணக்கு பாதிக்கும்' என்று சொன்னார்.
பின்னர் அதே விஜயகாந்த் கூட்டணிக்கு வருவார் பழம் நழுவி பாலில் விழும் என்றார். அவ்வளவு ஏன் கடந்த 2005க்கு பின்னர் விஜயகாந்த் பற்றியும் அவரது கட்சி பற்றியும் திருமாவளவன் வைக்காத விமர்சனமா? பின்னர் மக்கள் நலக் கூட்டணி என ஆரம்பித்து விஜயகாந்த்தை அவர் முன்மொழியவில்லையா? ஈழப் போர் நடந்து கொண்டிருக்கும் போது முற்றிலும் மாறுபட்ட கருத்து கொண்ட ராஜபக்சேவை திருமாவளவன் போய் சந்திக்கவில்லையா? இப்படிப் பல கேள்விகளை சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகின்றன. அதை அனைத்தையும் தொகுத்து இந்தக் கட்டுரை இங்கே முன்வைத்துள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage