மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் உயர் நீதின்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. தண்டனையை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
2019-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் பரப்புரையின் போது, கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில், பொருளாதார மோசடிகளைச் செய்துவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியோடிப் பதுங்கியிருக்கும் லலித் மோடி, நீரவ் மோடி உள்ளிட்ட குற்றவாளிகளைப் பற்றி பேசிய ராகுல் காந்தி, " ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்" என்று விமர்சித்தார்.
ராகுல் காந்தி மோடி என்ற ஒபிசி சமூகத்தினரை விமர்சித்ததாக குஜராத் மாநிலத்தில் ஒருவர் ராகுல் காந்தி மீது கிரிமினல் அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் கீழமை நீதிமன்ற நீதிபதி, ராகுல் காந்திக்கு இரண்டாண்டுகள் தண்டனை வழங்கினார். இதனையடித்து, உடனடியாக ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த தீர்ப்புக்கு எதிராக சூரத் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்திருந்தார். அங்கும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்த்திருந்தார்.
ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிக்வி, "மனுதாரர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சமூக தார்மீகத்தை சீர்குழைக்கும் வகையில் இல்லை. இவை பெரும்பாலும் கொள்தகா குற்றமாகவும் (non-cognizable), பிணையில் வெளி வரக்கூடியதாகவும் (Bailable) , தீவிரமில்லாத தன்மை (Non-serious Offence) உடையதாகவும் உள்ளது. எனவே, சிறைத் தண்டனையையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், இந்த சிறைத் தண்டனை மீள முடியாத பாதிப்பை உருவாக்குவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு கொள்ள முடியாததன் மூலம், மக்களின் குரலை பிரதிநிதித்துவம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தொகுதி மக்கள் தங்களுக்கான குரல்களை இழந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
எதிர் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர், "நீதிமன்றம் ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்யவில்லை. நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டது. எனவே, அவர் மீள முடியாத துயரை அனுபவிக்கிறார் என்பது தவறு. மேலும், "சிறைத் தண்டனை தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும், மன்னிப்பு கோரா முடியாது என்றும் அவர் பொது வெளியில் பேசியுள்ளார். இதுதான், அவரின் வெளிப்படையான நிலைப்பாடு. எனவே, சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடுவது அவரின் போலித் தன்மையை காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி இன்று தனது தீர்ப்பை வாசித்தார். தனது தீர்ப்பில், " குற்றம் சுமத்தப்பட்ட ராகுல்காந்தி மீது குறைந்தபட்சம் 10 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குக்குப் பிறகும் மேலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீர் சாவர்க்கர் பேரன் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார். எப்படியிருந்தாலும், இந்த தண்டனை எந்த அநீதியையும் ஏற்படுத்தாது. தண்டனை உத்தரவு சரியானது. அதில், தலையிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.