பாட்டி இந்திரா. அண்ணன் ராகுல் போல தகுதி நீக்க வழக்கை சந்திக்கும் பிரியங்கா! பாஜக திடீர் மனு!

post-img
டெல்லி: கேரளா மாநில வயநாடு லோக்சபா தொகுதி எம்பி பிரியங்கா காந்தியின் தேர்தல் வெற்றிக்கு எதிராக கேரளா உயர்நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். பிரியங்கா காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தவறான தகவல்களை தந்து உண்மைகளை மறைத்துள்ளதால் அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அம்மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றார். பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து தற்போது பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். கேரளா உயர்நீதிமன்றத்தில் நவ்யா ஹரிதாஸ் தாக்கல் செய்த மனுவில், பிரியங்கா காந்தியின் வேட்பு மனுவில் சொத்துகள் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன; இது தேர்தல் நடத்த விதிகளுக்கு எதிரானது; ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இணையானது. இந்த குற்றத்துக்காக பிரியங்கா காந்தியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்து அவரது எம்பி பதவியை பறித்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட கோரப்பட்டுள்ளது. கேரளா உயர்நீதிமன்றத்துக்கு ஜனவரி 5-ந் தேதி வரை விடுமுறை. ஆகையால் இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் விசாரணைக்கு வரக் கூடும். 1971-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வென்றார் பிரியங்கா காந்தியின் பாட்டி இந்திரா காந்தி அம்மையார். இந்திரா காந்தியின் இந்த தேர்தல் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. ராஜ்நாராயண் தொடர்ந்ந்த இந்த வழக்கில் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புதான் இந்திரா காந்தி, 1975-ம் ஆண்டு அவசரநிலைப் பிரகடனத்தை அமல்படுத்த (எமர்ஜென்சி) காரணமாகவும் அமைந்தது. பிரியங்கா காந்தியின் அண்ண் ராகுல் காந்தியும் எம்பி பதவி பறிக்கப்பட்டு பின்னர் மீண்டும் பெற்றவர். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் திருடர்கள் அனைவரும் மோடி என்ற குடும்பப் பெயரிலேயே இருக்கின்றனர் என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் உடனடியாக ராகுல் காந்தியின் எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த சிறை தண்டனைக்கு தடை விதித்தது. இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்பியானார்.

Related Post