7 வது முறையும் திமுக ஆட்சி.. இதுதான் நம்ம டார்கெட்.. செயற்குழுவில் முழங்கிய ஸ்டாலின்!

post-img
சென்னை: கடந்த தேர்தல்களில் பெற்ற வாக்கு சதவிகித கணக்கில் எடப்பாடி பழனிசாமி காற்றில் கணக்கை போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார் என்றும், திமுக என்றால் கத்தி கத்தி பேசும் எடப்பாடி, பிரதமர் மோடியை எதிர்த்து பேச தைரியம் இருக்கிறதா, துணிவு இருக்கிறதா? என்றும் திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும் 2026 தேர்தலில் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும், 200 வெல்வோம் என்றும் ஸ்டாலின் பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைமை செயற்குழு கூட்டம் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும், மத்திய அரசு மற்றும் அமித்ஷாவை கண்டிக்கும் வகையில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செய்றகுழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- 2019 லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 19.4 சதவிகித வாக்குகளை பெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 20.4 சதவிகித வாக்குகளை தான் பெற்றுள்ளது. அதற்கு முந்தைய தேர்தலை விட 14 தொகுதிகளில் அதிகமாக போட்டியிட்ட அதிமுக 12.58 சதவிகித வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி காற்றில் கணக்கை போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார். ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கை மிஞ்சும் வகையில் எடப்பாடி பழனிசாமி கணக்கு போடுகிறார். அவர் சொல்லும் கணக்கை அடிப்படை அறிவு உள்ள அதிமுகவினரே நம்ப மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி எவ்வளவு தான் கதறினாலும் அவருடைய துரோகங்களும், குற்றங்களும் தான் மக்களுக்கு ஞாபகம் வரும். பிரதமர் மோடியை எதிர்த்து பேச எடப்பாடிக்கு தைரியம் இருக்கிறதா, துணிவு இருக்கிறதா? திமுக என்றால் மட்டும் எடப்பாடி கத்தி கத்தி பேசுகிறார். டங்க்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக எடப்பாடி பாஜகவை கண்டித்தாரா? திமுக என்றால், கொள்கையும், அதை நிறைவேற்றும் தியாகமும் தான் அடிப்படை. வரும் 2026 தேர்தலில் 200 வெல்வோம். 2026 தேர்தலில் வெல்லப்போவது திமுக கூட்டணி தான் 7 வது முறையாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் இலக்கு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Related Post