திடீரென இரவில் மலை மீது குவிந்த அரிட்டாபட்டி கிராம மக்கள்.. டங்ஸ்டன் சுரங்க விவகாரம்.. பரபர முடிவு

post-img
மதுரை: அரிட்டாபட்டி கிராமத்தில் கிராமத்தில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே மலையின் மீது அமர்ந்து தொடர் போராட்டம் நடத்த அக்கிராம மக்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு டங்ஸ்டன் கனிமம் எடுக்க அனுமதி அளிப்பது தொடர்பான குத்தகை ஏல அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஆய்வுடன் கூடிய அந்த சுரங்க குத்தகை ஏல அறிவிப்பு செய்யப்பட்ட நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை மத்திய அரசு தகுதியான நிறுவனமாகத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. சுரங்க அனுமதி: இந்த தகவல் வெளியானது முதல் பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய அனுமதி தரக்கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு இதுபோல தீவிர நடவடிக்கைகளை ஒரு பக்கம் எடுத்து வரும் நிலையில், மற்றொருபுறம் அப்பகுதி மக்களும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அரிட்டாப்பட்டி மற்றும் அருகே உள்ள நாயக்கர்பட்டி கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தமிழ்நாடு அரசு ஏற்கனவே பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவித்துள்ளது. இதன் காரணமாகவே அப்பகுதியில் சுரங்கத்திற்கு அனுமதி தரக்கூடாது என்பதை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்து வருகிறார்கள். நாடாளுமன்றத்திலும் கூட இது தொடர்பாகத் தமிழ்நாடு எம்பிக்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். மலை மீது போராட்டம் நடத்த முடிவு: இந்தச் சூழலில் அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக முடிவு செய்ய அந்த பகுதியில் உள்ள மலை மீது ஊர் மக்களும் அமர்ந்து ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக் கூட்டத்திலேயே டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்த அரிட்டாபட்டி மக்கள் முடிவு செய்துள்ளனர். அங்குள்ள மலை மீது அமர்ந்து இந்த தொடர் போராட்டத்தை நடத்த அவர்கள் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மலை மீது அமர்ந்து பொதுமக்கள் ஆலோசனை நடத்திய நிலையில், கிராமத்திலேயே வெவ்வேறு வடிவங்களில் போராட்டம் நடத்தவும் அந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர், அதற்கான தேதி விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். டங்ஸ்டன் சுரங்கம்: முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்கப்பட்டதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் மாநில அரசு அனுமதியில்லாமல் சுரங்க ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்தை மூத்த அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்த நிலையில், ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேறியது. அப்போது பாஜக சார்பில் பேசிய நயினார் நாகேந்திரனும் மத்திய அமைச்சரிடம் சுரங்கம் விரைவில் நல்ல செய்தி வரும் என்று குறிப்பிட்டார். அன்றைய தினமே இந்த தீர்மானம் மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post