மார்ச் மாசம் திருப்பதிக்கு போக பிளானா? காலை 11 மணிக்கு ஆதார் கார்டுடன் ரெடியா இருங்க!

post-img
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை மார்ச் மாதம் தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு கட்டண டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது. பொதுவாக இந்த டிக்கெட்டுகள் மாதந்தோறும் 24 ஆம் தேதியே வெளியாகும் நிலையில் தற்போது தாமதமாக இரு நாட்கள் கழித்து வெளியாக உள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய 90 நாட்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிடுகிறது. ஆர்ஜித சேவைகள், மூத்த குடிமக்கள் தரிசனம், ரூ 300 சிறப்பு தரிசனம், அங்கப்பிரதட்சிணம், உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெறலாம். ரூ 300 தரிசனத்திற்கு அறை விரும்புவோர் திருமலை, திருப்பதி, தலகோணம் ஆகிய 3 இடங்களில் ஒரு இடத்தில் புக் செய்து கொள்ளலாம். இந்த நிலையில் மார்ச் மாதம் செல்வதற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது. சுமார் 4 லட்சத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை வெளியிடப்படும். இன்று மாலை 3 மணிக்கு அறைகளையும் புக் செய்து கொள்ளலாம். திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தனிக் கணக்கை தொடங்கி புக் செய்யலாம். இல்லாவிட்டால் தேவஸ்தானத்தில் செயலியை கொண்டு செல்போன் மூலம் புக் செய்து கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் ஆதார் எண், வயது, ஆதார் எண்ணில் இருப்பதை போன்று பெயர் பட்டியலுடன் காத்திருக்க வேண்டும். ஸ்லாட் ஓபன் செய்யப்பட்டால் உடனே அந்த தகவல்களை எல்லாம் நிரப்பி பணத்தை கட்டி விட வேண்டியதுதான்! அந்த வகையில் கடந்த 21 ஆம் தேதி ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்பட்டன. கல்யாணோத்சவம், ஆர்ஜித சேவை, ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கின. இதில் கல்யாணோத்சவத்திற்கு ரூ 1000, ஆர்ஜித சேவை, தீபலங்கார சேவை,ஊஞ்சல் சேவைகளுக்கு தலா ரூ 500 செலுத்த வேண்டும். ஒரு ஐடியில் அதிகபட்சமாக இரு டிக்கெட்டுகள் வரை மட்டுமே புக் செய்ய முடியும். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி, ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி மார்ச் மாதத்திற்கான ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் டிசம்பர் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கும், மார்ச் மாதத்திற்கான சிறப்பு தரிசன ரூ 300 டிக்கெட்டுகள் வரும் 26ஆம் தேதி, அதாவது இன்று 11 மணிக்கு வெளியிடப்படும். அது போல் திருமலையில் உள்ள தங்கும் அறைகள் இன்றைய தினம் மாலை 3 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான கோட்டாக்கள் வெளியிடப்படும். திருமலையில் மட்டுமில்லை திருப்பதியிலும் தேவஸ்தானத்தின் தங்கும் விடுதிகளில் பக்தர்கள் தங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் பள்ளிகளுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கும் என தெரிகிறது. ஆனால் ஏப்ரல், மே மாதங்களில்தான் இந்த கூட்டம் அதிகரித்து தர்ம தரிசனத்திற்கு 2, 3 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வைகுண்ட ஏகாதசி துவார தரிசனம் என்ற தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டது. அதாவது ஜனவரி 10ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறது. இது அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் திறக்கப்படும். அந்த வகையில் திருப்பதியிலும் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும். இந்த சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். இதற்காக 1.40 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட நிலையில் அவற்றில் 25 நிமிடங்களில் மொத்தம் விற்றுத் தீர்ந்துவிட்டன. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post