சென்னை: டங்ஸ்டன் சுரங்க அனுமதி விவகாரத்தில் அதிமுக இது தொடர்பான மசோதாவுக்கு டெல்லியில் ஆதரவு அளித்து இருந்ததாக விமர்சித்து இருந்தார். இருப்பினும், அதற்கு அதிமுக எம்பி தம்பிதுரை மறுப்பு கூறியிருந்த நிலையில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். மதுரை மக்களுக்கு அதிமுக செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது தொடர்பாக இன்று திமுக- அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி: நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பிக்கள் குரல் எழுப்பத் தவறியதாகவும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மக்கள் போராட்டம் நடத்திய பிறகே முதல்வர் கடிதம் எழுதுகிறார் என்றும் விமர்சித்து இருந்தார். அதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் பழனிசாமி நடிப்பதாகப் பதிலளித்திருந்தார்.
அதற்கு அதிமுக எம்பி தம்பிதுரை டெல்லியில் விளக்கமளித்திருந்தார். அதாவது, "டங்ஸ்டன் திட்டத்துக்கு ஆதரவாகப் பேசியது போல திமுகவினர் தவறான தகவல் பரப்பி வருகிறது. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் பொய்யான தகவலைப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. நான் இதுபோல பேசியதே கிடையாது. கனிமமள கொள்ளையைத் தடுக்கவே ஏல முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அது தொடர்பாக நான் பொதுவாகவே பேசினான். டங்ஸ்டன் குறித்து நான் பேசவே இல்லை" என்பது போலக் கூறியிருந்தார்.
ஸ்டாலின் பதிலடி: இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் இந்த பதிலடி கொடுத்துள்ளார். அதாவது அதிமுக ஆதரித்த அந்த சட்டமே டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக சிபிஎம் கட்சியின் சு.வெங்கடேசன் ட்வீட் செய்திருந்த நிலையில், அதைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் இந்த கருத்துகளைக் கூறியுள்ளார்.
சு.வெங்கடேசன்: சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில், "எடப்பாடி அவர்களே இன்று நீங்கள் பேசியதை விட ஆயிரம் மடங்கு ஆவேசத்தோடு கடந்த ஐந்து ஆண்டுகள் நாங்கள் மோடி ஆட்சியின் கொடுமைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருந்தோம். அப்போது நீங்கள் கூட்டணி தர்மம் என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் கூண்டுப் பறவையாகக் குறுகிக் கிடந்தீர்கள்.
சட்டமன்றத்தில் சண்டமாருதம் செய்யும் உங்கள் கட்சி நாடாளுமன்றத்தில் கொட்டாவி விடக்கூட வாய் திறக்கவில்லை. உங்களின் புதிய அவதாரம் கடந்தகால பாவங்களை இல்லாமல் செய்துவிடாது. காற்றும், நீரும், வளமும் கார்ப்பரேட்டுகளுக்கானதே எனும் பிரதமர் மோடியின் விசுவாசத்திற்கு யார் துணை நின்றாலும் அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டு இருந்தார்.
நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி: அதைப் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், "மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி! பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது! மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், "நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை" எனத் திரு. தம்பிதுரை அவர்கள் மழுப்பி இருக்கிறார்.
அ.தி.மு.க. ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க. எதிர்த்தது; அ.தி.மு.க. ஆதரித்தது. டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் திரு. தம்பிதுரை ஆதரித்தார்.
அதிமுக ஆதரித்தது: அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க. ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது. அ.தி.மு.க.வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது.
தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை? மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க. ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage