தி. நகரில் திடீரென வீட்டிற்குள் பள்ளம்.. பீதி அடைந்த மக்கள்! என்ன நடந்தது? சென்னை மெட்ரோ விளக்கம்

post-img
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. அருகில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இதன் காரணமாக தான் வீட்டில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து வீட்டில் இருந்துவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் மெட்ரோ ரயில் பணியின் காரணமாக தான் அந்த வீடு உள்வாங்கியிருப்பதாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை தி நகர் லாலா தோட்டத்தில் இரண்டாவது தெருவில் உள்ள ஒரு வீடு நேற்று திடீரென மன் அழுத்தம் காரணமாக உள்வாங்கியதாக தகவல் வெளியானது. நல் வாய்ப்பாக அந்த வீட்டில் யாரும் இல்லை. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான சென்னை தி நகரில், வீடு திடீரென உள்வாங்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். முதலில் மன் அழுத்தம் காரணமாக தான் வீடானது சில இன்ச் அளவில் உள்வாங்கியதாக கூறப்பட்டது. அந்த தெருவில் பல வீடுகள் இருக்கும் நிலையில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் மட்டும் இப்படி திடீரென ஏற்படக் காரணம் என்னவென்று தெரியாமல் மக்கள் குழம்பிப் போனார்கள். மேலும் அருகில் சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகள் நடப்பதனால், அதுதான் காரணமாக இருக்கக் கூடும் என்று பேசப்பட்டது. இந்த நிலையில் வீட்டில் பள்ளம் ஏற்பட்டது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இதில், சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் தி நகர் பனகல் பார்க் வரை மெட்ரோ சுரங்கம் தோண்டும் போது, அதிக அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட ஒரு வீட்டில் மட்டும் சில இன்ச் உள்வாங்கியதாக விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது:- சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் தி நகர் பனகல் பார்க் வரை மெட்ரோ சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியின் போது, அதிக அழுத்தம் காரணமாக குறிப்பிட்ட ஒரு வீட்டில் மட்டும் சில இன்ச் உள்வாங்கியுள்ளது. நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை. அதிக அழுத்தம் காரணமாகவே சென்னை தி.நகரில் உள்ள குறிப்பிட்ட வீடு மட்டும் சற்று இறங்கியுள்ளது. பொறியியல் ரீதியாக அங்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு பணிகளும் நடந்து வருகிறது. மண்ணின் தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். சென்னை முழுவதும் 115 கிமீ தூரம் மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதில் 45 கிமீ சுரங்கம் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அந்த வீட்டில் இருந்தவர்கள் அங்கு குடியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். பராமரிப்பு செலவு அனைத்தையும் மெட்ரோ நிர்வாகமே ஏற்றுக்கொண்டுள்ளது. வீட்டில் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு தான், எந்த பாதிப்பும் இனி இல்லை என்று ஆய்வு செய்த பிறகு தான் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியமர்த்தப்படுவார்கள். சென்னையின் நிலவியல் கடினமான பாறை மற்றும் இலகுவான மண் போன்றவற்றை கொண்டிருக்கிறது. இதனாலும் இப்படி சில நேரங்களில் நடக்கிறது. எது எப்படி ஆயினும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே மெட்ரோ ரயில் பணிகள் செய்யப்படும். மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மெட்ரோ நிர்வாகம் செயல்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post