ரேசனில் துவரம் பருப்பு வாங்குறீங்களா? உங்களுக்கு ஒரு குட் நி

post-img

சென்னை: ரேசன் கடைகளில் மலிவு விலையில் துவரம் பருப்பு வாங்கும் மக்களுக்காக தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
துவரம் பருப்பு விற்பனைக்கான கால அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில் அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும் துவரம் பருப்பு விற்பனையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
துவரம் பருப்பு சாம்பார் எல்லோருக்கும் பிடித்தமானது. மளிகைக்கடைகளில் துவரம் பருப்பு விலை ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேசன் கடைகளில் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் பருப்புகள், எண்ணெய், இலவச அரிசி போன்றவை லட்சக்கணக்கான மக்களின் பசியாற்றுகிறது.
தமிழக ரேஷன் கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும் சர்க்கரை கிலோ, 25 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், 1 கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும்; 1 லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
பொது வினியோக திட்டத்தில் வழங்கப்படும் அரிசி, கோதுமையை மத்திய அரசு வழங்குகிறது. சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்குகிறது. இந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை சிறப்பு பொது வினியோக திட்டத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அத்திட்டத்திற்கான கால அவகாசத்தை, அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


செப்டம்பர் மாதம் ரேசனில் இலவச அரிசி வாங்க சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு டோக்கன் விநியோகம்
ரேசன் கடைகளில் கடந்த காலங்களில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்றவை விற்பனை செய்யப்பட்டன. இலவச அரிசித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில், மானிய விலையில், அத்தியாவசிய தேவையான பருப்புகளும் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டம் 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. இது எப்படி எந்த நேரத்தில் தொடங்கப்பட்டது என்று ஓருமுறை அமைச்சர் எ.வ. வேலு கூறியிருக்கிறார்.


கடந்த "2007ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள கடைகளில் விலைவாசி அதிகமாக இருந்தது. நான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ஒருநாள் காலை 6.30 மணிக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி எனக்கு போன் செய்தார். நாளிதழ் பார்த்தியா என கேட்டார். அப்போது நான் 13வது பக்கம் பார்த்தேன் என சொன்னேன். என்ன செய்தி எனக் கேட்டார். துவரம் பருப்பு விலை ரூபாய் 65 ஆக அதிகரித்துவிட்டது என சொன்னேன்.


உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் அத்தியாவசிய தேவை என்பதை உணராமல், என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். நான் துறை சார்ந்த செயலாளர் ஒருவரையும் நிதித்துறை அதிகாரி ஒருவரையும் அழைத்து, வருடத்திற்கு நாம் குறைந்த விலையில் பருப்பு வகைகளை கொடுத்தால் எவ்வளவு செலவாகும் என கேட்டறிந்த போது அவர்கள் 300 கோடி ரூபாய் ஆகும் என சொன்னார்கள். அதை கருணாநிதியிடம் தெரிவித்தேன்.


அப்போது கருணாநிதி என்னிடம், நீ ஒரு கிலோ பருப்புக்கு என்ன விலை நிர்ணயம் செய்து இருக்கிறாய் என்று கேட்டார். நான் 40 ரூபாய் எனச் சொன்னேன், அப்போது கருணாநிதி என்னிடம், "நான் சொல்கிறேன், 30 ரூபாய்க்கு அதனைக் கொடு" என்றார். 300 கோடி இழப்பு எனக்கு பெரும் விஷயம் அல்ல, எல்லோருடைய வீட்டிலும் துன்பம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைத்தது தான், இன்று நியாயவிலைக் கடைகளில் பருப்பு வகைகள் குறைந்த விலைக்கு கிடைக்கக் காரணம்" எனத் தெரிவித்தார்.


கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ரேசன் கடைகளில் துவரம் பருப்பு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை சிறப்பு பொது வினியோக திட்டத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அத்திட்டத்திற்கான கால அவகாசத்தை, அக்டோபர் முதல் டிசம்பர் வரைக்கும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 

Related Post