டாடா காட்டிய பெரிய கட்சிகள்.. இந்திய கூட்டணி சில்லு சில்லாக உடைகிறது?

post-img

டெல்லி: எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி மொத்தமாக உடையும் நிலையில் உள்ளது. பெரிய கட்சிகள் வரிசையாக கழன்று கொண்டு செல்கின்றன.

பல்வேறு கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணியின் 4-வது ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில்தான் இந்தியா கூட்டணியின் முதல் மோதல் வெளிப்படையாக நடந்தது. சோனியா காந்தி, ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, நிதிஷ்குமார், லல்லுபிரசாத் யாதவ், சரத்பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட 28 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டணியில் சமீப காலமாகவே மோதல்கள் வெடிக்க தொடங்கி உள்ளன. ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டம் எப்போது நடக்கும் என்று மட்டுமே ஆலோசனைகள் செய்யப்படுகின்றன. மற்றபடி சீட் ஷேரிங், கூட்டணியின் கொள்கை, பிரதமர் வேட்பாளர் என்று எதுவும் அறிவிக்கப்படுவது இல்லை.

மம்தா ஷாக் அறிவிப்பு; இப்படிப்பட்ட நிலையில்தான், தேசிய அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். இந்தியா கூட்டணியில் இருந்தாலும் லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .. ஆனால் தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆம் ஆத்மி; இன்னொரு பக்கம் நிதிஷ் குமார் மட்டுமின்றி மமதா பானர்ஜியும் இதில் பிரதமர் வேட்பாளர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் இந்தியா கூட்டணி அப்படி பொதுவாக ஒரு வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் அவரும் அப்செட் ஆனதாக கூறப்படுகிறது.

ஆம் ஆத்மி: இதேபோல் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.

நிதிஷ் குமார்: இன்னொரு பக்கம் பீகாரில் ஏற்கனவே நிதிஷ் குமார் காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் இன்று ராஜினாமா செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இன்று மாலை மீண்டும் பாஜக ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் தற்போது ஜேடியு கூட்டணி ஆட்சி உள்ளது. ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கிய மகா பந்தன் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்த கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறினால் அவர்களுக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்காது. இந்த நிலையில் அவர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

79 எம்எல்ஏக்களுடன் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது. அவர்களை விட ஒரு இடம் குறைவாக அதாவது 78 எம்எல்ஏக்களுடன் பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. 45 எம்எல்ஏக்களுடன் நிதிஷ்குமாரின் ஜேடியு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இந்த தொடர் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் பிளவுகள் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பாஜகவிற்கு சாதகமாக திரும்பும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Related Post