கோவை : கோவை அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையத்தில் இருந்து, கோல்டுவின்ஸ் வரை, 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1,621 கோடியில் மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மொத்த கோவைக்கும் உள்ளது. பீளமேடு ஹோப் கல்லூரி அருகில் ரெயில்வே பாலம் குறுக்கிடுவதால், 52 மீட்டர் நீளத்துக்கு இரும்பு காரிடர் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் முடிந்து எப்போது மேம்பாலம் திறக்கப்படும் என்பதை பார்ப்போம்.
சென்னையில் எப்படி அண்ணா சாலையோ அது போல் கோவையை பொறுத்த வரை அவினாசி சாலையாகும்.. கோவை மக்கள் அவினாசி சாலை வழியாகவே திருப்பூர், ஈரோடு, சேலம், சென்னை, பெங்களூர் உள்பட பலவேறு பகுதிகளுககு போக முடியும். இந்த சாலை தான் கோவையின் இதயம் என்று கூறலாம். அவினாசி சலையில் நகரத்தில் லட்சுமி மில்ஸ் தொங்கி, பாப்பநாயக்கன் பாளையம், நவ இந்தியா, ஹோப் காலேஜ், பீளமேடு, வரை கடுமையான வாகன நெருக்கம் உள்ள பகுதியாகும். இந்த சாலையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
இந்த வாகன நெரிசலை குறைக்க வேண்டி, கோவை அவினாசி ரோட்டில் பீளமேடு கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் சந்திப்பு வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. ரூ.1,621 கோடி செலவில் இந்த மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
கோவை அவினாசி மேம்பாலம் 305 தாங்கு தூண்களுடன், 17.25 மீட்டர் அகலத்தில் கான்கிரீட் காரிடர்களுடன் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. 10.5 மீட்டர் அகலத்தில் சாலையின் இருபக்கங்களிலும், சர்வீஸ் சாலைகளும், ஒன்றரை மீட்டர் அகலத்தில் மழை நீர் வடிகால் மற்றும் நடைபாதையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலத்தில் கோவை அண்ணாசிலை, நவ இந்தியா, ஹோப்கல்லூரி, விமானநிலையம் உள்பட 7 இடங்களில் ஏறுதளம், இறங்கு தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த மேம்பாலத்தின் தற்போதைய நிலை குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது, கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தில், பீளமேடு ஹோப் கல்லூரி அருகில் ரயில்வே பாலம் குறுக்கிடுகிறது. இங்கு சுமார் 52 மீட்டர் நீளத்துக்கு இரும்பு காரிடர் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இரும்பு காரிடர் தயார் செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. மொத்தம் 700 டன் எடையுள்ள இந்த காரிடர்களை 40 பிரிவுகளாக பிரித்து, கோவை கொண்டு வர உள்ளோம்.
அதன்பின் இந்த மாத இறுதியில் இதனை பொருத்தி, இதன் மீது கான்கிரீட் அமைக்கப்பட்டு மிகவும் உறுதி தன்மையுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும். அனைத்து பணிகளும் வருகிற பிப்ரவரி மாதம் முடிவடைந்து, சோதனை ஓட்டம் நடைபெறும். அதன் பின்னர் மார்ச் மாதம் போக்குவரத்து முழுமையாக தொடங்கும்" என்று கூறினார்கள்.
இதனிடையே உப்பிலைப்பாளையம் தொடங்கி கோல்டுவின்ஸ் அருகே 10 கிலோமீட்டருக்கு அமைக்கப்படும் இந்த மேம்பாலம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் அதிகாரிக கூற்றுப்படி பயன்பாட்டிற்கு வந்தால் அவினாசி சாலையில் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறையும். அதேநேரம் கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலத்தை நீடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள். தமிழக அரசு அதற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்ததுடன் 600 கோடி ரூபாய் பணமும் ஒதுக்கி,, பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.