“அழுத்தமா..? விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை!” போட்டு உடைத்த திருமாவளவன்

post-img

திருச்சி: அம்பேத்கர் புத்தக வெளியிட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காததற்கு காரணம் அவர் மீது போடப்பட்ட அழுத்தம்தான் என்று விஜய் விமர்சித்திருந்தார். இந்த கருத்துக்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' எனும் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்பார் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இந்நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க மாட்டார் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பையடுத்து பல்வேறு பேச்சுகள் எழுந்தன. புத்தகத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிடுகிறார் என்பதால்தான் திருமா பங்கேற்கவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறியிருந்தனர்.

இதனையடுத்து இன்று புத்தகத்தை வெளியிட்டு பேசிய விஜய், "விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வர முடியாமல் | போய்விட்டது; அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு அழுத்தம் இருப்பதை என்னால் யூகிக்க முடிந்தாலும் அவர் மனசு முழுக்க முழுக்க இனி நம்முடன் தான் இருக்கும்" என்று பேசியிருந்தார்.
விஜய்யின் இந்த கருத்துக்கு திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "விஜய் அம்பேத்கர் நூலை வெளியிட்டிருப்பது வரவேற்பதற்குறியது. நான் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்கததற்கு காரணம் திமுக அல்ல. அரசியல் அழுத்தம் காரணமாக இந்நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என்று விஜய் பேசியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அழுத்தம் கொடுத்தால் இணங்க கூடிய அளவுக்கு விசிக பலவீனமாக இல்லை" என்று கூறியுள்ளார்.
அதேநேரம், விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் திருமா பங்கேற்கவில்லையோ? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மறுப்பு தெரிவித்த திருமா, "நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு விஜய் காரணம் அல்ல" என்று கூறியுள்ளார்.

Related Post