சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீண்டும் கைது! அரசு திட்டம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது

post-img
மதுரை: யூடியூபர் சவுக்கு சங்கர் தேனி கஞ்சா வழக்கில் ஆஜராகாததால் கைது செய்யப்பட்டு இப்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே தூய்மை பணியாளர்கள் குறித்த தமிழக அரசின் திட்டம் தொடர்பாக அவதூறு கருத்துகளை வெளியிட்ட புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்தார். இடையில் அவர் ஜாமீன் பெற்றிருந்த நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இது தொடர்பான விசாரணை மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அதில் சவுக்கு சங்கர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. சவுக்கு சங்கருக்கு நீதிபதி செங்கமல செல்வன் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில், சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கைது செய்தனர். இதற்கிடையே இப்போது புதிய வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு பரப்பியதாக புதிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தூய்மை பணியாளர்கள், தமிழக அரசு வெளியிட்ட திட்டம் ஆகியவை குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தேனி கஞ்சா வழக்கில் பிடிவாரண்டிற்கு ஆஜராகாததால் சவுக்கு சங்கர் கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இப்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை சிறைக்குச் சென்ற மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்ததற்கான நகலைச் சவுக்கு சங்கரிடம் வழங்கினர். கடந்த ஏப்ரல் மாதம் சவுக்கு சங்கர் தேனி பழனிச்செட்டிப்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். அப்போது அவருடன் அவரது ஓட்டுநர் ராம்பிரபு மற்றும் ராஜரத்தினம் ஆகியோரும் தங்கி இருந்தனர். அதிகாலை 3 மணியளவில் கோவை சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவருடன் இருந்த ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபு ஆகிய இருவரையும் பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் சுமார் 18 மணி நேர விசாரணை நடந்த நிலையில், நள்ளிரவு 11.30 மணிக்குத் தேனி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் பெண் போலீசாரை தாக்க முயன்றது, அவதூறாகப் பேசியது, தலா 100 கிராம் வீதம் நான்கு பாக்கெட்டுகளில் 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது ஆகிய புகார்களில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெண் போலீசாரை அவதூறாக பேசியது உள்ளிட்ட பல புகார்களில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை ஏற்றுச் சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இருப்பினும், கஞ்சா வழக்கு மதுரையில் நடந்து வந்த நிலையில், அதில் ஆஜராகாததாலேயே சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Post