மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் குர்லா என்ற பகுதியில் மிக மோசமான விபத்து அரங்கேறியுள்ளது. அங்குப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் சென்றதில் பல வாகனங்கள் மீது மோதியுள்ளது. இந்த மிக மோசமான விபத்தில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிகிறது.
மும்பையின் குர்லா பகுதியில் மிக மோசமான விபத்து அரங்கேறியது. நேற்று திங்கள்கிழமை இரவு அந்த வழியாகச் சென்ற அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் சாலையில் தாறுமாறாகச் சென்ற அந்த பேருந்து மோதியதில் மிக மோசமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், 30 பேர் காயமடைந்தனர்.
விபத்து: இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கிறது. அதில் சிவப்பு நிற பேருந்து அதிவேகமாகச் சாலையில் செல்வதும், சாலையோரம் இருந்தோர் மீது தாறுமாறாக மோதுவதும் தெளிவாகத் தெரிகிறது. முதலில் சாலையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதிய பேருந்து, அதன் பிறகும் நிற்காமல் அடுத்தடுத்து நின்றவர்கள் மீது மோதியுள்ளது.
மகாராஷ்டிர அரசுக்குச் சொந்தமான பெஸ்ட் என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்து இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தில் திடீரென ஏற்பட்ட பிரேக் பெயிலியர் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
என்ன நடந்தது: இந்த விபத்தில் சுமார் 30 பேர் வரை காயமடைந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. காயமடைந்தோர் சியோன் மற்றும் குர்லா பாபா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்குக் காயம் மோசமாக இருக்கும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இரவு 9.50 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. நம்பர் 332 ரூட்டில் இயங்கும் பெஸ்ட் நிறுவனத்தின் பேருந்து குர்லா என்ற இடத்தில் இருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநரின் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். பேருந்து சில பாதசாரிகள் மற்றும் வாகனங்கள் மீது மோதியதாக அதிகாரி கூறினார். அப்போதும் பேருந்து நிற்கவில்லை. கடைசியாக அது குடியிருப்பு வளாகத்தின் வாயில் மீது மோதிய பிறகே நின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேரில் பார்த்தவர்கள்: இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், "சுமார் 200 மீட்டர் தூரம் பஸ் தாறுமாறாகச் சென்றது. அதன் பிறகே குடியிருப்பு வளாகத்தில் மோதி நின்றது. நான் ரயில் நிலையத்திற்குக் கிளம்பும் போது பலத்த சத்தம் கேட்டது. உடனடியாக என்ன நடந்தது என்று பார்த்தேன். பாதசாரிகள், ஒரு ஆட்டோ மற்றும் மூன்று கார்கள் உட்பட பல வாகனங்கள் மீது பஸ் மோதி இருந்தது.
சாலையில் சிலர் அடிப்பட்டு இருந்தனர். இதையடுத்து நானும் எனது நண்பரும் இணைந்து ஆட்டோவில் காயமடைந்தவர்களை மீட்டு பாபா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்" என்றார். அந்த பேருந்து கிட்டதட்ட போலீஸ் வாகனம் ஒன்றின் மீதும் மோதியதாகத் தெரிகிறது.
3 மாதங்கள்: மகாராஷ்டிர அரசின் பெஸ்ட் நிறுவனம் மும்பை முழுக்க மின்சார பேருந்து சேவையை வழங்கி வருகிறது. மும்பை மட்டுமின்றி அண்டை நகர்ப்புறங்களுக்கும் தனது சேவையைச் சமீபத்தில் விரிவுபடுத்தி இருந்தது. ஒலெக்ட்ரா என்ற நிறுவனம் இந்த பேருந்தை தயாரித்துள்ளது.இந்த பேருந்துகளைத் தனியார் நிறுவனத்தின் ஓட்டுநர்களே இயக்கி வருகிறார்கள். மேலும், இந்த பஸ் செயல்பாட்டிற்கு வந்து வெறும் மூன்று மாதங்களே ஆகியுள்ள நிலையில், அது விபத்தில் சிக்கியுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage