சென்னை: "அரசியல் எல்லைகளைக் கடந்து, அனைத்து கட்சியினராலும் மதிக்கப்படும் போராளி நல்லகண்ணு அய்யா அவர்கள், பொதுவாழ்க்கையில் எளிமைக்கும், அரசியலில் தூய்மையானவர் என்பதற்கும் இன்றுவரை ஒரே எடுத்துக்காட்டாய் விளங்கி கொண்டிருக்கிறார்" என்று மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பெயிரா புகழாரம் சூட்டியிருக்கிறது. அத்துடன், அய்யா நல்லகண்ணுவின் 100வது பிறந்த நாள் வாழ்த்து செய்தியினையும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளது.
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி விடுத்திருக்கும் பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
"நேர்மை, தியாகம், தன்னலமற்ற உழைப்பு, அடக்குமுறைக்கு அஞ்சாத தீரம் போன்றவற்றின் மறுபெயர்தான் நல்லகண்ணு. இதே 100 வருடங்களுக்கு முன்பு, தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் அய்யா நல்லகண்ணு. இதே நாளில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொடங்கப்பட்டது... கட்சி தோன்றிய நாளில் தோன்றிய ஒரே மனிதர் அய்யா நல்லகண்ணுதான்.
தியாகங்கள்: ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, பள்ளிப் பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். தன்னுடைய 15 வயதிலேயே பொதுவுடைமைக்கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு பல தியாகங்களைச் செய்தவர்.
1949ம் ஆண்டு தலைமறைவு காலத்தில் தோழர் ஒருவரின் வீட்டில் நல்லகண்ணு தூங்கிக்கொண்டிருந்தபோது, திடீரென போலீசார் அவரையும் அவரது நண்பர்களையும் சுற்றி வளைத்தது. மலைஉச்சியிலிருந்து உருட்டி விடுவதாகவும், "உன் தோழர்கள் எங்கே?" என்று கேட்டும் மிரட்டியபோதும், "தெரியாது" என்ற பதிலையே நல்லகண்ணு திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தார்.
ஆயுள் தண்டனை இதனால் ஆத்திரமடைந்த ஒரு போலீஸ் அதிகாரி, நல்லகண்ணுவின் கையில் விலங்கு பூட்டி, சித்ரவதை செய்து, அவரது மீசையையும், கன்னத்தையும் தீயிட்டு பொசுக்கினார். எனினும், கடைசிவரை நல்லகண்ணுவிடம் இருந்து எந்த பதிலையும் காவல்துறையினரால் பெற முடியவில்லை. நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, ஆயுள்தண்டனையையும் அனுபவித்தார். இதுபோல பாறையை போல துணிச்சலுடன், எண்ணற்ற அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட அஞ்சாநெஞ்ச சிங்கம்தான் அய்யா நல்லகண்ணு..
அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் அய்யா நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் யெலாளராக 13 வருடங்கள் செயலாற்றியவர். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அய்யா நல்லகண்ணு, 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தலைவராக இருந்திருக்கிறார்.
அடித்தட்டு மக்கள்: தன் இனத்து மக்களையே எதிர்த்துப் போராடி, அடித்தட்டு மக்களை தட்டி எழுப்பி, சமூகநீதியை நிலைநாட்ட தொடர்ந்து போராடி கொண்டிருக்கும் அற்புத மனிதர். மக்களுக்காகவே தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு, வாழ்க்கை முழுவதும் தியாக வாழ்க்கை வாழ்ந்து வருபவர். நதிநீர் உரிமைகளுக்காகவும், சுற்றுச்சூழலை காப்பதற்காகவும், மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும் தொடர்ந்து போராடும் நெஞ்சுரம் மிக்கவர்.
அரசியல் எல்லைகளைக் கடந்து, அனைத்து கட்சியினராலும் மதிக்கப்படும் போராளி நல்லகண்ணு அய்யா அவர்கள், பொதுவாழ்க்கையில் எளிமைக்கும், அரசியலில் தூய்மையானவர் என்பதற்கும் இன்றுவரை ஒரே எடுத்துக்காட்டாய் விளங்கி கொண்டிருக்கிறார். எதிர்கால அரசியலில் ஈடுபடும் இன்றைய இளைஞர்களுக்கும், மிகச்சிறந்த வாழ்வியல் உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
பிறந்தநாள் வாழ்த்து: அய்யா நல்லகண்ணு நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், மன உறுதியுடனும், நீடூழி வாழ்ந்து பொது வாழ்வில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம், நாட்டு மக்களுக்கு சிறந்த தொண்டினை ஆற்றிட இந்த நன்னாளில் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து கொள்கிறேன்" என்று டாக்டர் ஹென்றி தன்னுடைய வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்
Note:
The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.