சென்னை: ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்த, கட்டுமான திட்டங்களுக்கான கால வரம்பை நீட்டிப்பதற்கு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த 2016ல், இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ரியல் எஸ்டேட் திட்டங்களை பதிவு செய்யவும், அது தொடர்பான புகார்களை விசாரிக்கவும், மாநில ஆணையங்கள், மேல் முறையீட்டுக்கான தீர்ப்பாயம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, 5,381 சதுர அடி அல்லது 8 வீடு மனைகள் இருந்தால், அந்த திட்டத்தை ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்வது கட்டாயமாகும்..
கட்டணம் வசூல்: தற்போதைய நிலவரப்படி, குடியிருப்பு திட்டங்களை பதிவு செய்யும்போது, 10.7 சதுர அடிக்கு, 25 ரூபாய், வணிக திட்டங்களுக்கு 10.7 சதுர அடிக்கு, 60 ரூபாய் என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது..
அதேபோல, பதிவு காலாவதியாகும் நாளி்லிருந்து 3 மாதம் முன்னரே நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கூடுதலாக 10 சதவீதம் தொகை வசூலிக்கப்படும் என்றும் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
விண்ணப்பங்கள்: அதன்படி, திட்டங்களை பதிவு செய்ய விண்ணப்பிக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அதற்கான கால வரம்பை தெரிவிக்க வேண்டும்... பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் 2 அல்லது 3 ஆண்டுகளில் முடிப்பதாக தெரிவிக்கும்.
ஒருவேளை இது முடியாதபட்சத்தில், அதற்குரிய ஆவண ஆதாரங்களுடன் தெரிவித்து, கூடுதலாக 2 வருடங்கள் வரை அவகாசம் பெறலாம். எனினும், காலவரம்பை புதுப்பிப்பதற்கான கட்டணம் இதுவரை நிர்ணயிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது ரியல் எஸ்டேட் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
கட்டணம் அறிவிப்பு: அந்த அறிவிப்பில், "ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்த கட்டுமான திட்டங்களின் கால வரம்பை புதுப்பிக்க, கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதல் ஓராண்டுக்கு, அத்திட்டத்தை பதிவு செய்யும்போது செலுத்திய கட்டணத்தில், 10 சதவீதத்தை செலுத்த வேண்டும்.
இதன்பிறகு, மீண்டும் ஓராண்டு அவகாசம் தேவைப்பட்டால், அதற்கு பதிவு கட்டணத்தில், 20 சதவீத தொகையை செலுத்த வேண்டும். இதற்கு அடுத்தபடியாக, 6 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்படும். இதற்கு பதிவு கட்டணத்தில், 20 சதவீத தொகையை செலுத்த வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.