திருப்பதி: பிரம்மோற்சவத்திற்கு தயாராகி வருகிறது திருமலை ஏழுமலையான் கோவில். மலை எங்கும் வண்ண வண்ண மலர்களால் அலங்காரங்கள் களைகட்டியுள்ளன. பூலோக வைகுண்டமாக காட்சி தருகிறது ஏழுமலையான் கோவில் இந்த பிரம்மோற்சவ திருவிழா யாரால் எப்போது தொடங்கப்பட்டது என்பது பற்றிய சுவாரஸ்யமான புராண கதையை பார்க்கலாம்.
ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதம் 9 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடக்கும். இந்த 9 நாட்களும் மக்கள் வெள்ளம் அலை மோதும். எங்கு நோக்கினும் மக்கள் தலைகள், தலைகள். மலை முழுவதும் கோவிந்தா, கோவிந்தா என்றகோஷம் எதிரொலிக்கும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதிவலம் வரும் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கண்கொள்ளாக்காட்சி. வெங்கடாஜலபதிக்கு இந்த பிரம்மோற்சவம் நடப்பது குறித்து புராணக்கதை ஒன்று உண்டு. அதை அறிந்த பின்பு 9 நாள் பிரம்மோற்சவம் குறித்துமேலும் அறிவோம்.
நாரதருக்கு ஒரு சந்தேகம் வந்தது. மும்மூர்த்திகளில் யாருக்காக முனிவர்கள் யாகம் செய்ய வேண்டும், இந்த மூவரில் யாகத்தை ஏற்றுக் கொள்ளும்சாந்தமான மூர்த்தி யார் என முனிவர்களிடம் கேள்வி எழுப்பினார் நாரதர். இதையடுத்து பிருகு முனிவர் என்பவர் மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என அறிய விண்ணுலகம் சென்றார். பிரம்மாவையும், சிவனையும் சோதித்து அவர்கள் சிறந்தவர்கள் என அறிந்து கொண்டு வைகுந்தம் சென்றார். நேராக விஷ்ணுவிடம் சென்று அவர் மார்பில் உதைத்தார்.
நாராயணன் பொறுமையாக என்னை உதைத்ததால் தங்கள் கால்களுக்கு வலி ஏற்பட்டிருக்குமே என கவலையுடன் கூறினார். அதைக் கேட்ட பிருகு முனிவர் தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டார். பெருமாளும் அவரை மன்னித்தார். முனிவர்கள் செய்யும் யாகங்களை பெற சிறந்த மூர்த்தி மாகவிஷ்ணுவே என பிருகு முனிவர் தீர்ப்பளித்தார். ஆனால், நாராயணின் மனைவிக்கு கடும் கோபம் வந்தது. நாராயணனிடம் கேட்டாள் தேவி, நான் உங்கள் நெஞ்சில் குடியிருக்கிறேன். உங்களை நெஞ்சில் உதைத்தது என்னை உதைத்தது போலாகும் நீங்கள் அவரை தண்டிக்காமல் மன்னித்து விட்டீர்களே என்று கேட்டார் மகாலட்சுமி.
ஒரு நல்ல காரியத்ததை நிறைவேற்றவே அவர் இது போல் நடந்து கொண்டுள்ளார் என பதில் கூறினார் நாராயணன். ஆனால் அவரது சமாதானத்தை லட்சுமி ஏற்கவில்லை. கோபித்துக் கொண்டு பூலோகம் சென்று விட்டார். இதனால் வருத்தமடைந்த நாரயணனும் பூலோகம் வந்தார். லட்சுமியைத் தேடி அலைந்த நாராயணன் திருப்பதி மலைக்கு வந்து சேர்ந்தார். அங்கு வகுளாதேவியை தனது தாயாக பாவித்து அவருடன் வசித்து வந்தார்.
துவாபாரயுகத்தில், கண்ணன் தன் அவதாரத்தை முடித்துக் கொள்வது குறித்து அனைவரும் வருத்தமடைந்தனர். கண்ணன் அவர்களிடம், நீங்கள் அனைவரும்கலியுகத்தில் என்னோடு வாழ்வீக்கள் என வரமளிததார். கண்ணனை வளர்த்த யசோதா கண்ணனின் இரு திருமணத்தையும் காண இயலவில்லை. அது குறித்து வருந்திய யசோதாவிடம் கலியுகத்தில் திருவேங்கடத்தில் திருவேங்கடத்தான் உருவில் உங்கள் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன். நீங்கள் வகுளாதேவி உருவெடுத்த அங்கு எழுந்தருளியுள்ள வராக மூர்த்தியை வழிபட்டு வாருங்கள் நான் உங்களை அங்கு சந்திக்கிறேன் என திருவாய் மலர்ந்தருளினார் கண்ணன.
யசோதை அதன்படி தன் உடலை விட்டு கலியுகத்தில் வகுளாதேலியாக அவதாரம் எடுத்தாள். வகுளா தேவி நாரயணனை சீனிவாசன் என அன்புடன் அழைத்து வந்தார். சீனிவாசன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் பத்மாவதியைச் சந்தித்து திருமணம் செய்ய விருப்பம் கொள்கிறார். பத்மாவதியும் சீனிவாசன் மேல் விருப்பம்கொள்கிறார். இவர்கள் விருப்பத்தை அறிந்த பத்மாவதியின் தந்தை ஆகாச மன்னன் அவர்கள் திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தார்.
ஆகாச மன்னன் மரணமடைந்த பின் அவரது சகோதரர் தொண்டைமான், சீனிவாசனிடம் உங்களை எத்தனை தரிசித்தும் திருப்தி ஏற்படவில்லை. நீங்கள் தயைகூர்ந்து அருள் புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டான். சீனிவாசன் உன் அண்ணன் பிரம்மச்சாரியாக இருந்த என்னை சம்சாரியாக்கினார். இந்த உலகில் எனக்கு தங்க இடமில்லை. எனவே எனக்கு கோவில் கட்டி வை என்றார். சீனிவாசன் ஓர் இடத்தைக் குறிப்பிட்டுக்காட்டி இங்கு கோவில கட்டு எனக் கூறினார்.
பிரம்ம தேவன் முதலிய தேவர்கள், வைணவத் தொண்டர்கள், வேதம் கற்றுத் தேர்ந்த அந்தணர்கள் அனைவரும் பங்கேற்க ஆனந்த நிலையம் என்று பெயரிடப்பட்ட கோயிலில் சீனிவாசனும் பத்மாவதியும் எழுந்தருளினர். அப்போது பிரம்மதேவர், சீனிவாசனிடம் நீங்கள் கலியுகம் முழுவதும் தங்களை காண வரும் பக்தர்களின் பாவங்களை தீர்த்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
'வேங்' என்றால் பாவம், 'கடா' என்றால் தீர்த்து வைக்கும் சக்தி என்று கூறிய சீனிவாசன், இந்த இடம் வேங்கடா என அழைக்கப்படட்டும் என்றார். திருவேங்கடம் என்று அழைக்கப்படும் அந்த இடத்தில் அருளும் சீனிவாசனும் வேங்கடேஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார். இதையடுத்து இந்த ஆலயத்துக்கு விழா எடுக்க பிரம்மன் விரும்பினார். சீனிவாசனிடம் சென்று நாங்கள் இப்போது நடத்தவிருக்கும் விழாவுக்கு சம்மதிக்க வேண்டும் என்றார். இதற்கு வேங்கடநாதனும் சம்மதித்தார். பிரம்மனும், தேவர்களும் இணைந்து நடத்திய அந்த விழா தான் பிரம்மோற்சவம். இது தான் பிரம்மோற்சவம் தொடங்கிய வரலாறு.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு செப்டம்பம்பர்18 முதல் 26 வரை முதல் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதே போல அக்டோபர் மாதத்தில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. தினந்தோறும் மலையப்பசுவாமி பூதேவி ஸ்ரீதேவி சமேதராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.