துபாய்: தமிழ்நாட்டில் வறுமையான குடும்பத்தில் பிறந்த தமிழர் ஒருவர் மலர்களை ஏற்றுமதி செய்யும் சர்வதேச தொழிலில் கொடிகட்டிப் பறந்து வருகிறார்.
யாரையாவது குறைந்து மதிப்பிட வேண்டும் என்றால் 'உன்னைப் பூபோல் ஊதித் தள்ளிவிடுவேன்' எனச் சொல்வது வழக்கம். ஒரு அந்தப் பூவை வைத்து 200 மில்லியன் டாலர் வர்த்தகம் செய்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவே அவர் ஒரு தமிழர் என்றால் இன்னும் ஆச்சரிய அதிகரிக்கவே செய்கிறது.
இவர் படித்ததோ பத்தாம் வகுப்புதான். ஆனால், கிட்டத்தட்ட 30 நாடுகளுக்கு மலர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இவர் பூக்கள் வர்த்தக சந்தையில் சர்வதேச கொடியை நட்டு சாதித்துக் காட்டியிருக்கிறார். இவர் யார்? அவர் பெயர் என்ன? முகம்மது எஹியா. பிளாக் துளிப் குழுமம் என்ற என்ற நிறுவனத்தைக் கட்டி எழுப்பியவர் இவர்.
இவரது நிறுவனம் துபாயிலிருந்து இயங்கி வருகிறது. இவர் பிறந்து வளர்ந்தது முழுக்க தமிழ்நாட்டில் உள்ள நடுக்கடை என்ற சிறிய கிராமத்தில்தான். இவர் தனது நிறுவனத்தை 1990 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறார். அது படிப்படியாக வளர்ந்து யுஏசி, கத்தார், ஓமன், சவுதி அரேபியா, மலேசியா, இந்தியா, கென்யா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஆலம் மரம் போல் தழைத்து வளர்ந்து நிற்கிறது.
இது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் முகம்மது எஹியா, "வேறு எந்த ஒரு பொருளைவிடப் பூவை பார்த்தவுடனேயே அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகை மலரும். அந்தளவுக்கு மலர் என்பது மகிழ்ச்சியான விசயம். நாங்கள் 1 மில்லியன் பூக்களை வளர்க்கிறோம். எங்களிடம் 200 முதல் 300 வகையாக மலர்கள் இருக்கின்றன" என்கிறார்.
பலரும் எத்தியோப்பியா என்றால் வறுமையான நாடு. அங்கே போய் தொழில் செய்ய முடியுமா? என்பார்கள். ஆனால், இவர் அந்த வறுமை நாட்டில் கால் பதித்து வர்த்தகத்தில் வென்று காட்டியுள்ளார். இந்தச் சாதனையை 1982இல் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய ஒருவர் நிறைவேற்றி இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. குடும்ப வறுமை அவரை பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுத்திருக்கிறது. அதன்பின்னர் இவர் சகோதரர் வேலை செய்யும் துபாய்க்கு மலர் விற்பனை செய்யும் தொழிலாளியாக வந்துள்ளார்.
"என் முதல் சம்பளம் 1983இல் 400 திர்ஹம்தான். 8 வருடங்கள் சேல்ஸ் மேனாக இருந்தேன். எனக்கு அப்போது சொந்த தொழில் செய்ய ஆர்வம் இருந்தது. 50 ஆயிரம் சேமித்து வியாபாரத்தைத் தொடங்கினேன். கூட என் அண்ணனும் இணைந்தார். முதன்முதலில் அஜ்மான் பகுதியில் 2 ஆயிரம் சதுர அடியில் கடை தொடங்கினேன்" என்கிறார்.
இவர் துபாயில் தொடங்கிய மலர் வியாபாரம் கென்யா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததுள்ளார். துபாய் முழுக்க உள்ள பல நட்சத்திர விடுதிகளில் இருக்கும் அழகழகான மலர்கள் முழுக்க இவரே விளைவித்தவை. இப்போது பல நாடுகளில் உள்ள நட்சத்திர விடுதிகளை இவர் சாகுபடி செய்த துலிப் மலர்கள் பல லட்சக் கணக்கான மனங்களைக் கவர்ந்து வருகின்றன.
நமக்கு துலிப் மலர்கள் என்றால் 'எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது' ஷங்கர் படப் பாட்டுதான் ஞாபகம் வருகிறது. இவரே அதைவைத்து 200 மில்லியன் டாலர் பணம் சம்பாதித்து வருகிறார்.
தொடர்ந்து அவர் பேசும் போது, "ஒரு மலரின் வாழ்நாள் 7 நாட்கள்தான். அதற்கு அதை விற்றாக வேண்டும். சவாலான வேலைதான். என்னை நம்பி வந்தவர்களிடம் நானே முதலீடு கொடுத்துக் கடை வைத்துக் கொடுத்தேன். அப்படிப் பல நாடுகளில் முதலில் கஷ்டங்களைச் சந்தித்துத்தான் இந்த உயரத்தை நாங்கள் பிடித்திருக்கிறோம்" என்கிறார்.