தென் கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்-ன் இந்திய துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா வாயிலாக இந்த முதலீடு செய்யப்படுகிறது. இந்த 20,000 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னைக்கு அருகில் புதிய தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதோடு இந்தியாவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பை மேம்படுத்த வருடத்திற்கு 178,000 பேட்டரி பேக்-களை உருவாக்கும் அசெம்பிளி யூனிட்டை அமைக்கவும், தமிழ்நாடு முழுவதும் 100 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவும் திட்டத்திற்கும் இந்த முதலீட்டை பயன்படுத்த உள்ளது ஹூண்டாய்.
இப்புதிய முதலீட்டின் மூலம் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் மொத்த உற்பத்தி அளவை ஆண்டுக்கு 850,000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், எலக்ட்ரிக் வாகனங்கள், இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகள் மீதான வரியை உயர்த்துவதாக மத்திய அரசு தெரிவித்த சில வாரங்களில் ஹூண்டாய் தனது புதிய முதலீட்டை அறிவித்துள்ளது.
இந்தியா கார் தயாரிப்பு நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் சர்வதேச நிறுவனமான BYD மற்றும் SAIC இன் MG மோட்டார் ஆகியவை வரிசையாக அடுத்தடுத்து எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது மூலம் இந்தியா EV துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் மாத விற்பனை தரவுகள் படி, இந்தியாவின் பயணிகள் வாகன பிரிவு வர்த்தகத்தில் தென் கொரியாவின் ஹூண்டாய் கிட்டத்தட்ட 15% சந்தைப் பங்கை கொண்டு 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் பெரிய வித்தியாசத்துடன் மாருதி சுசூகி உள்ளது.
சென்னையில் ஹூண்டாய் நிறுவனம் இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு இடங்களில் உற்பத்தி தொழிற்சாலையை கொண்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் வருடத்திற்கு 7,40,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ஹூண்டாயின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை தென் கொரியா நாட்டிற்கு வெளியே உள்ள இரண்டாவது பெரிய உற்பத்தி தளமாக உள்ளது. ஹூண்டாய் இந்தியாவில் தற்போது இரண்டு எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. IONIQ 5 மற்றும் Kona Electric ஆகியவை இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது, இவ்விரு கார்களும் அதிகளவில் வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.