சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இடம்பெற செய்ய வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈட்டிய விடுப்பு, ஒப்படைப்பு ஊதியம் மீண்டும் வழங்குதல், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம் போன்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
பேரவை விதிகளின்படி, சட்டசபை கூட்டம் முடிவுற்ற நாளில் இருந்து 6 மாதத்துக்குள் மீண்டும் கூடியாக வேண்டும். அந்த வகையில், பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக சட்டசபை நாளை (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்குகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அதனை தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பின்னர், அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளது. என்ன தீர்மானம் என்றால், மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற உள்ளது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்க உள்ளார். தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நிறைவடைய உள்ளது.
இந்நிலையில் நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பு இடம் பெற செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது. அப்போது முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற போராட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் செவிக்கொடுத்து கேட்காமல் அடக்குமுறையை கட்டவிழ்த்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கொடுமைப்படுத்தினார். அப்போதைய எதிர்கட்சி தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போராட்டக்களத்திற்கே நேரடியாக வந்து தங்களை வறுத்திக் கொண்டு போராட வேண்டாம் நான் ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன் என அறிவித்தார். மேலும், கோரிக்கைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தார்.
பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகளை ரத்து செய்தார். போராட்டக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலனை வழங்கினார். துறைரீதியான நடவடிக்கை எடுத்து பணியிடமாற்றம் செய்யப்பட்டவர்களை மீண்டும் அதே பணியிடத்தில் கொண்டு வந்து பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கினார்.
அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படியை ஆறு மாதம் கழித்து வழங்கினார். பின்னர் மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்வை வழங்குகிறதோ, அதே தேதியிட்டு வழங்குவேன் என அறிவித்து நிதிநிலை சீரானதும் உயர்த்தி வழங்கி வருகிறார்.
மேலும், மத்திய அரசு உத்தரவாத ஓய்வூதிய திட்டத்தை அறிவித்திருக்கின்றது. இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டதை கொண்டு வருவதற்கான அறிவிப்பும், ஈட்டிய விடுப்பு, ஒப்படைப்பு ஊதியம் மீண்டும் வழங்குதல், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற செய்ய வேண்டும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Weather Data Source: Wettervorhersage 21 tage