யப்பா சாமி.. இந்திய வான் பரப்பில் ஸ்டார்லிங் சிக்னலை ஆஃப் செய்துட்டோம்.. எலான் மஸ்க் திட்டவட்டம்

post-img
டெல்லி: மணிப்பூர் வன்முறையில் ஈடுபட்டவர்களால், ஸ்டார்லிங்க் சாதனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கதிர்வீச்சு ஆஃப் செய்து வைக்கப்பட்டதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கீராவ் குனௌவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் சில இணைய சாதனங்களையும் கைப்பற்றினர். இந்திய ராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ், கைப்பற்றப்பட்ட பொருட்களின் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தது. அந்த சாதனங்களில் ஒன்றில் "ஸ்டார்லிங்க் லோகோ" இருந்ததை சமூக ஊடக பயனர்கள் உடனடியாகக் கண்டறிந்தனர். டிசம்பர் 16 அன்று, பாதுகாப்புப் படையினர் எக்ஸ் தளத்தில், "குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகள் ஸ்பியர் கார்ப்ஸின் கீழ் மணிப்பூர் காவல்துறையுடனும் பிற பாதுகாப்புப் படைகளுடனும் இணைந்து சுராசந்த்பூர், சந்தேல், இம்பால் கிழக்கு மற்றும் காக்போக்பி மாவட்டங்களில் உள்ள மலை மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தியது. ஸ்னைப்பர்கள், தானியங்கி ஆயுதங்கள், துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், நாட்டு வெடிகுண்டுகள், ஒற்றைக் குழல் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் போர் தளவாடங்கள் உட்பட 29 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன" என்று அதில் பதிவிட்டனர். இந்த பதிவில் கருத்து தெரிவித்த ஒரு பயனர், "ஸ்டார்லிங்க் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. எலான் மஸ்க் இதைக் கவனித்து இந்த தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவுவார் என்று நம்புகிறேன்" என்று கூறினார். இதற்கு அதே பதிவில், பதிலளித்த மஸ்க், "இது தவறானது. இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கதிர்கள் ஆஃப் செய்து வைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில், போராளி குழு ஸ்டார்லிங்க் லோகோவைக் கொண்ட ஒரு சாதனத்தைப் பயன்படுத்தியதாக இரண்டு ராணுவ அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. மியான்மருடன் உள்ள எல்லை வழியாக அந்த சாதனம் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மியான்மரில் கூட ஸ்டார்லிங்க் நிறுவனம் செயல்படவில்லை என்றாலும், கிளர்ச்சிக் குழுக்களால் ஸ்டார்லிங்க் சாதனங்கள் பயன்படுத்தப்படுவது ஊடக அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இதற்கிடையில், செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் மஸ்கின் ஸ்டார்லிங்கிற்கு இந்தியாவில் செயல்பட உரிமம் இதுவரை இல்லை. ஸ்டார்லிங் என்பது எலான் மஸ்கின், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் ஒரு செயற்கைக்கோள் இணையத் தொகுதி (Satellite internet constellation) ஆகும். இது பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் (Low Earth Orbit - LEO) ஆயிரக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி உலகளாவிய இணையச் சேவையை வழங்கும். ஸ்டார்லிங்க் ஆயிரக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்களை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து சுமார் 550 கி.மீ தொலைவில் சுற்றி வருகின்றன. வழக்கமான புவிநிலை செயற்கைக்கோள்களை விட இது மிகவும் குறைவான உயரம் கொண்டவை என்பதால், சிக்னல் அச்சு பிசகாமல் கிடைக்கும். இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் தரை கட்டுப்பாட்டு நிலையங்கள் உள்ளன. இவை செயற்கைக்கோள்களுடன் தொடர்புகொண்டு இணைய டேட்டாக்களை பெற்று பரிமாறுகின்றன. மணிப்பூரில், கடந்த ஆண்டு மே முதல் மெய்டீஸ் மற்றும் குகி-ஜோ குழுக்களிடையே ஏற்பட்ட இன வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணைய சாதனத்தைப் பயன்படுத்தி ஆழ்கடல் வழியாகச் சென்று முதல் முறையாக 4.25 பில்லியன் டாலர் மதிப்புள்ள மெத்தபைட்டமைன் போதைப் பொருளை, இந்திய கடல் எல்லைக்குள், கொண்டு வந்த கடத்தல்காரர்களைக் கண்டுபிடிப்பதற்காக இந்திய காவல்துறை ஸ்டார்லிங்கிடம் இருந்து தகவல்களைப் பெற முயல்கிறது என்று முன்னதாக ராய்ட்டஸ் தெரிவித்திருந்தது. ஆனால் எலான் மஸ்க், அப்படியெல்லாம் எங்கள் சிக்னல் இந்தியாவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்

Related Post