தென்காசி: தென்காசியில் தபால் பெட்டியை சாலையில் தூக்கி சென்ற நபரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. இதனை அங்கிருந்த மக்களே தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து, இணையத்திலும் வெளியிட்டுள்ளனர்.. என்ன நடந்தது தென்காசியில்?
சமீபத்தில், விழுப்புரம் ரயிலில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரால், பயணிகளிடம் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.. அதாவது, புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு வந்த பாசஞ்சர் ரயிலில் வந்த நபர் ஒருவர், பயணிகளிடம் டிக்கெட் வாங்கி பரிசோதித்துள்ளார்.
அப்போது ஒரு பயணியிடம், அவரது டிக்கெட் செல்லாது என்று கூறியுள்ளார்... பிறகு அங்கிருந்த சில பயணிகள், டிக்கெட் எடுக்காமலேயே பயணம் செய்துள்ளதும் தெரியவந்தது.
விழுப்புரம் ரயில்: இதனால், அவர்களை அந்த நபர் கடுமையாக எச்சரித்தார்.. அத்துடன், தன் கையில் வைத்திருந்த டிக்கெட்டுகளையும் அவர்களுக்கு தந்தார்.. இதனால், பயணிகள் குழம்பி போய்விட்டனர்... அவர் உண்மையிலேயே டிக்கெட் பரிசோதகரா என்ற சந்தேகம் எழுந்தது.
விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷன் வந்ததுமே, அங்கிருந்த போலீசாரிடம் அந்நபரை ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் விசாரித்தபோதுதான், அவர் மானாமதுரை அடுத்த அன்னவாசல் பகுதியைச் சேர்ந்த 25 வயது சதீஷ் என்பதும், பி.காம்., பட்டதாரியான அவர், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாராம். கடந்த ஒரு வருடத்துக்கு முன் மனநலம் பாதிக்கப்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளது தெரியவந்தது.
ரயில் டிக்கெட்டுகள்: சம்பவத்தன்று புதுச்சேரிக்கு சென்றுவிட்டு விழுப்புரம் பாசஞ்சர் ரயிலில் ஏறியிருக்கிறார்.. ஆனால், கூடுதலாக ரயில் டிக்கெட்டுகளை வாங்கி தன்னுடைய பாக்கெட்டுகளில் வைத்து கொண்டாராம். இந்த டிக்கெட்டுகளை வைத்து கொண்டுதான், டிக்கட் பரிசோதகர் போல் பயணிகளிடம் நடந்துகொண்டது தெரியவந்தது. பிறகு விழுப்புரம் ரயில்வே போலீசார், அவரது வீட்டிற்கு தகவல் தந்து, அவர்களுடன் அந்த இளைஞரை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மற்றொரு மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரால் தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தென்காசி மாவட்டம் மேலகரம் போஸ்ட் ஆபீஸ் முன்பிருந்த, தபால் பெட்டியை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், நைசாக தூக்கி கொண்டு சாலையில் நடந்து சென்றிருக்கிறார்.. யாருக்கும் தெரியாமல் எடுத்து செல்வதாக நினைத்துக்கொண்டு, நடுரோட்டிலேயே இந்த போஸ்ட் பாக்ஸை தூக்கி சென்றார்.. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
தபால் பெட்டி: அத்துடன், அந்த நபரிடமிருந்து தபால் பெட்டியையும் மீட்க முயன்றார்கள்.. ஆனால் யாராலுமே அவரிடமிருந்து தபால் பெட்டியை வாங்க முடியவில்லை. இதனால், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தந்தார்கள்.. தென்காசி போலீசாரும் விரைந்து சென்று, அந்த நபரிடம் சாதுர்யமாக பேசி, ஆந்த தபால் பெட்டியை மீட்டு சென்று மேலகரம் தபால் நிலையத்தில் மறுபடியும் வைத்துவிட்டனர்.
தபால் பெட்டியை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தூக்கி சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லுங்கி, டி ஷர்ட் அணிந்துள்ள இந்த நபர் யார் என்று தெரியவில்லை.. நடுத்தர வயதுடையவராக காணப்படுகிறார்.
கோரிக்கை: இதையடுத்து, சாலைகளில் இப்படி சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, பாதுகாப்பு தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மீண்டும் கோரிக்கை விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.. தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க மாவட்ட வாரியாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் 2 மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.