"அரோகரா" முழக்கத்தோடு ஏற்றப்பட்ட மகா தீபம்.. திருவண்ணாமலையில் பக்தி பரவசத்தில் பக்தர்கள்

post-img
திருவண்ணாமலை: இன்று திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படும் நிலையில், திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.. அருணாசலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில், அதைப் பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கண்டனர். அரோகரா என்ற பக்தி முழக்கத்தோடு அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதற்காகக் கடந்த டிச. 4ம் தேதி அதிகாலையே அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது.. தினந்தோறும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. வீதிகளில் உலா வந்த திருத்தேரைப் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தீப திருநாள்: தீபத் திருவிழாவின் 10ம் நாளான இன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும்.. முதலில் அண்ணாமலையார் கோயில் கருவறையில் காலை 4 மணிக்கு இந்த பரணி தீபம் ஏற்றப்பட்டது. கோயிலில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 7,500 பேருக்கு அனுமதி தரப்பட்டது.. அனுமதிச் சீட்டை பெற்ற பக்தர்கள், அதிகாலை 2.30 மணி முதல் கோயிலில் குவிந்தனர். பரணி தீபம் ஏற்றப்பட்டதை அவர்கள் பக்தி பரவசத்தோடு நேரில் கண்டனர். தொடர்ந்து மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.. கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் அங்கு முன்கூட்டியே செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக மகா தீப கொப்பரை கோவிலில் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, நேற்றைய தினம் கனமழைக்கு மத்தியிலும் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மகா தீபம்: சுமார் 20 ஊழியர்கள் சேர்ந்து 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சிக்கு எடுத்துச் சென்றனர். இந்த மகா தீபத்தில் 4,500 கிலோ நெய் மற்றும் 1,500 மீட்டர் காடா துணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மகா தீபத்தை காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதிலும் மலையின் உச்சிக்குச் சென்று தரிசிக்க 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. உடல் சோதனை அடிப்படையிலேயே அவர்களுக்கு அனுமதி தரப்பட்டு இருந்தது. அங்குக் கூடியிருந்த பக்தர்கள் அரோகரா என்ற பக்தி முழக்கத்தை எழுப்ப மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை நேரில் குவிந்த பல ஆயிரம் பக்தர்களும், டிவி, இணையதளம் வழியாகப் பல கோடி பக்தர்களும் தரிசித்தனர். அதேபோல அருணாசலேஸ்வரர் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சொக்கப்பனை ஏற்றப்பட்டன. பனை ஓலைகள், அடிக்காம்புகள் நார் ஆகியவற்றால் செய்யப்பட்ட சொக்கப்பனை கார்த்திகை தீப திருநாளான இன்று பல்வேறு கோயில்களிலும் ஏற்றப்பட்டன. முக்கிய கோயில்களில் சொக்கப்பனை வைபவம் வெகு கோலாகலமாக ஏற்றப்பட்டது.

Related Post