சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. தடா நெடுஞ்சாலையில் டோல்கேட் கட்டணம் குறைகிறது.. நல்லூர் சர்ப்ரைஸ்!

post-img
சென்னை: சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னை - தடா தேசிய நெடுஞ்சாலையில் நல்லூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் 15 சதவீதம் வரை குறைகிறது. சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் முக்கிய சாலையாக 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்னை - தடா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. நான்கு வழிச்சாலையாக இருந்த இந்த தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் கடந்த 2009 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. விரிவாக்கம் மற்றும் பராமரிப்புக்காக 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்ட பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சுங்க கட்டணத்தை வசூலித்த நிறுவனம், விரிவாக்க பணிகளை முறையாக செய்யாமல் இருந்ததால் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்தது. இதையடுத்து, சென்னை தடா இடையிலான தேசிய நெடுஞ்சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் மீண்டும் துவங்கி நடைபெற்று வந்தன. இந்த பணிகள் தற்போது கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் சுமார் 10 கி.மீ தூரத்துக்கு விரிவாக்கம் நடைபெறவில்லை. இந்நிலையில், சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி கிடைத்துள்ளது. சென்னை - தடா தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் 15 சதவீதம் வரை குறைகிறது. நல்லூர் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் 15 சதவீதம் வரை குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சென்னை - கொல்கத்தா NH 16-ல் மாதவரம் சந்திப்பிலிருந்து பாடியநல்லூர் வரையிலான 10 கி.மீ தூரத்தை மாநில நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு முன்மொழிந்துள்ளது. இது கட்டணமில்லாப் பிரிவாகும். இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஒப்புதல் அளித்தவுடன், நெடுஞ்சாலையின் மொத்த சாலையின் நீளம் 54.5 கி.மீ-ல் இருந்து 44.5 கிமீ ஆக குறையும். இந்த மாற்றத்தின் காரணமாக கார் மற்றும் ஜீப்புகளுக்கான ரூ.80 கட்டணம் ரூ.15 குறைந்து, ரூ.65 ஆக குறையும். இலகுரக மோட்டார் வாகனங்கள் (எல்எம்வி) மற்றும் மினி பஸ்களுக்கான கட்டணம் ரூ.20 குறைக்கப்படும், அதாவது டோல் கட்டணம் ரூ.125ல் இருந்து ரூ.105 ஆக குறைக்கப்படும். இதேபோல், லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கான டோல்கேட் கட்டணம் ரூ.45 குறைக்கப்படும். இந்த வாகனங்களுக்கான சுங்க கட்டணம் ரூ.265ல் இருந்து ரூ.220 ஆக குறைக்கப்படும். மாதவரம் வரையிலான பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல், விரிவாக்கத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு ஆகியவற்றின் காரணமாக டோல் நெட்வொர்க்கில் இருந்து அகற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலையின் முதல் பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post