பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பிரசவங்களில் 46% அறுவை சிகிச்சைகள் மூலமே நடைபெறுகிறது; அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பதைத் தடுக்க புதிய திட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டமேலவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இதனை தினேஷ் குண்டு ராவ் தெரிவித்தார்.
கர்நாடகா சட்டமேலவையில் ஜெகதேவ் குத்தேதார் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்த பதில்: கர்நாடகா மாநிலத்தில் பொதுவாக பிரசவங்களில் அறுவை சிகிச்சை எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கர்நாடகாவின் தனியார் மருத்துவமனையில் 60% பிரசவங்கள், அறுவை சிகிச்சை மூலமே நடைபெறுகிறது. ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் 80% முதல் 90% வரை பிரசவங்கள், அறுவை சிகிச்சை மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. பணத்தை நோக்கமாகக் கொண்டே அறுவை சிகிச்சை பிரசவங்களை தனியார் மருத்துவமனைகள் மேற்கொள்கின்றன. கர்நாடகா அரசு மருத்துவமனைகளிலும் 36% பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கர்நாடகா மாநிலத்தில் சராசரியாக 46% பிரசவங்கள், அறுவை சிகிச்சை மூலம் நடைபெறுகின்றன. இத்தகைய போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதனைத் தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை அரசு விரைவில் மேற்கொள்ள இருக்கிறது. இத்திட்டம் வரும் ஜனவரி மாதம் தொடங்கப்படும்.
பொதுவாக கர்ப்பிணி பெண்கள் மனதளவில் பிரசவத்துக்கு தயாராக இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் பிரசவங்கள் நடத்தப்படுவதற்கான காரனங்கள் குறித்து ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆய்வு நடத்த இருக்கிறோம். இது தொடர்பாக விழிப்புணர்வு அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநிலத்தின் தாலுகாக்களில் செயல்படுகிற 24 மணிநேர மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை பிரசவங்களை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2023-24 மற்றும் 2024-25-ம் ஆண்டு காலங்களில் கருக்கலைப்பு, கருக்கொலை விவகாரங்களில் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கர்நாடகாவில் பிரசவ காலங்களில் பெண்கள், சிசுக்கள் அதிக எண்ணிக்கையில் மரணம் அடையும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. பெலகாவி மருத்துவமனையில் 10 மாதங்களில் 169 சிசுக்கள், அறுவை சிகிச்சை பிரசவங்களின் போது இறந்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மாநில அரசும் விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதேபோல பெல்லாரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது 7 பெண்கள், ஒரு சிசு இறந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.