புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் செங்கீரை கிராமத்தில் பெண்ணுக்கு வீட்டிலேயே யூடியூபில் பார்த்து மாமியாரும் கணவரும் பிரசவம் பார்த்ததால் குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது செங்கீரை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மனைவி அபிராமி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
கணவர் ராஜசேகரனுக்கு அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கை இல்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அபிராமிக்கு நேற்று பிரசவ வலி வந்தது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் யூடியூபில் பிரசவம் பார்ப்பது எப்படி என பார்த்துள்ளார்.
உடனே தனது தாயிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து அபிராமிக்கு யூடியூப் பார்த்தபடியே பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. இதனால் மூவரும் மகிழ்ந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே நீடித்தது.
ஆம்! திடீரென குழந்தையானது பிறந்த சில நிமிடங்களில் இறந்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசேகர், அபிராமி, மாமியார் என்ன செய்வது என தெரியாமல் திகைத்தனர். இதுகுறித்து அபிராமியின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்த நிலையில் அவர்கள் பதறியடித்து கொண்டு வந்த போது அபிராமியின் உடல்நிலை மோசமடைந்தது.
உடனே அபிராமியை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது போல் வீட்டிலேயே பிரசவம் பார்க்கக் கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் ராஜசேகரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்மைக்காலமாக எல்லாவற்றுக்கும் யூடியூப் யூடியூப் என வந்துவிட்டது. யூடியூப் பார்த்து சமைப்பது, யூடியூப் பார்த்து மெக்கானிக் பயிற்சி எடுப்பது, யூடியூப் பார்த்து படிப்பது.. இதெல்லாம் ஓகேதான். ஆனால் யூடியூப் பார்த்து பிரசவம் பார்ப்பது ஆபத்தானது.
தற்போது பிரசவ காலத்தில் தாய் சேய் மரணங்களே இல்லாமல் தடுக்க அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றுதான் மருத்துவமனையில் பிரசவம் என்பது! ஆனால் ஒரு உயிர் பூமிக்கு வருவதையும் பெண்ணுக்கு மறுபிறவியான பிரசவத்தையும் ஏதோ விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு யூடியூப் பார்த்து பிரசவங்களை பார்க்கிறார்கள்.
இது முற்றிலும் குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்து என அறிவுறுத்தியும் தொடர்ந்து இது போல் நிலை தொடர்கிறது. யூடியூப் பார்த்து கொல்வது, யூடியூப் பார்த்து வலிக்காமல் தற்கொலை செய்வது, யூடியூப் பார்த்து திருடுவது என பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது. இதற்கு என்றுதான் முற்றுப்புள்ளி வருவோமோ என தெரியவில்லை.