டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று பாஜக - காங்கிரஸ் எம்பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜகவின் 2 எம்பிக்களின் மண்டை உடைந்தது. இந்நிலையில் தான் குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்த தடை விதித்து லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது.
இதற்கிடையே தான் தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது. அதாவது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அமித்ஷா மன்னிப்பு கோரி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தையும் எதிர்க்கட்சியினர் முடக்கி வருகின்றனர்.
நேற்றைய தினம் காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். நீலநிற ஆடைகள் அணிந்து வந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். அப்போது நாடாளுமன்ற நுழைவு வாயிலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் பாஜக எம்பிக்கள் சந்திர சாரங்கி, முகேஷ் ராஜ்புத் ஆகியோர் காயமடைந்தனர். ராகுல் காந்தி தான் சந்திர சாரங்கியை தள்ளிவிட்டதாகவும், இதனால் தான் அவர் காயமடைந்ததாகவும் பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாஜக அளித்த புகாரில் ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்து தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி சபாநாயகர் ஓம்பிர்லா அலுவலகம் சார்பில்,‛‛நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் போராட்டம், தர்ணா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினருக்கம் இந்த தடை உத்தரவு பொருந்தும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடைசி நாளாகும். இன்றைய தினம் எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்கான இந்த உத்தரவை லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பிறப்பித்துள்ளார்.