மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் பார்வையாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்த மதுரை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. பார்வையாளர் கேலரி தடுப்பு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவற்றுக்காக ரூபாய் 43 லட்சத்துக்கு டெண்டர் கோரியுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் தமிழர்களின் பண்பாட்டையும் வீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு, தை முதல் நாள் பொங்கல் அன்று நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்பார்கள்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சில நாட்களில் நடத்தப்பட உள்ள நிலையில், ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர். அதேபோல், மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க பயிற்சி பெற்று வருகின்றனர்.
அரசு சார்பில் நடத்தப்படும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் 15 ஆம் தேதி பொங்கல் நாளில் நடைபெறுகிறது. 16 ஆம் தேதி பாலமேடு, 17 ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. அவனியாபுரம் போட்டிக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் பார்வையாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்த மதுரை மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. பார்வையாளர் கேலரி தடுப்பு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்டவற்றுக்காக ரூ.43.79 லட்சத்துக்கு டெண்டர் கோரியுள்ளது. டெண்டர்கள் எடுப்போர், ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள், அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வார்கள்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு எண் 92 ,100 இல் அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு திருவிழா நடத்துவதற்கு விழா மேடைகள் தடுப்பு வேலிகள் அமைக்கவும் மற்றும் குடிநீர் தொட்டிகள் அமைப்பது தொடர்பாக ரூபாய் 43 லட்சம் 79 ஆயிரம் மதிப்பில் ஒப்பந்த பள்ளி இன்று வெளியிடப்பட்டது.
மதுரை மாநகராட்சி ஜல்லிக்கட்டு தொடர்பான ஒப்பந்த புள்ளி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி மாலை நான்கு மணி அளவில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.