மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் சமையலுக்கான கியாஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும் என்பன உள்பட ஏராளமான வாக்குறுதிகளை மல்லிகார்ஜூன கார்கே அதிரடியாக அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சிக்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். கடந்த 2019ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து பிற எம்எல்ஏக்களின் உதவியுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. கமல்நாத் முதல்வரானார்.
அதன்பிறகு ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியில் போர்க்கொடி தூக்கியதால் 2020ல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பிறகு 109 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக பிற கட்சி எம்எல்ஏக்களை அரவணைத்த ஆட்சியை பிடித்தது. சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் தற்போது அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே மத்திய பிரதேசத்தில் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது.
இத்தகைய சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்குள்ள புண்டேல்காண்ட் பிராந்தியத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். இந்த பிராந்தியத்தில் சாகர், சத்தார்பூர், திகாம்கார், பிமராசி, தாமோ, பன்னா என மாவட்டங்கள் உள்ளன.
இங்கு 26 சட்டசபை தொகுதிகள் உள்ளது. இதில் 6 தொகுதிகள் தனித்தொகுதிகளாக (எஸ்சி) உள்ளன. கடந்த தேர்தலில் பாஜக 15 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 9 இடங்களையும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தலா ஒரு இடங்களையும் கைப்பற்றியது. இதனால் தற்போது மல்லிகார்ஜூன கார்கே இந்த பிராந்தியத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
குறிப்பாக சாகர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால் தான் பாஜகவுக்கு கடிவாளம் போடும் வகையில் மல்லிகார்ஜூன கார்கே அங்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இத்தகைய சூழலில் தான் சாகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சி வென்றால் கொண்டு வரும் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்தார்.
அதன்படி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். சமையல் காஸ் சிலிண்டரின் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 உரிமைத்தொகை வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.
மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார். தற்போதைய இந்த வாக்குறுதிகளில் பெரும்பான்மையானவை இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்தது. சமீபத்தில் நடந்து முடிந்த அந்த 2 மாநில தேர்தல்களில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. அந்த பார்முலாவில் தற்போது மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருவது குறிப்பிடத்தக்கது.