தேனி: தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வசிப்பவர் சின்னச்சாமி. இவருடைய மனைவி லீலாவதி.. இவர்களுக்கு காமேஷ் மற்றும் கவுசல்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் கவுசல்யா கணவனை பிரிந்து தாயுடனே வசித்து வந்தார். இந்நிலையில் லீலாவதியை பட்டப்பகலில் வீடு புகுந்து மர்ம நப்ர வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவரது மருமகனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவை சேர்ந்த சின்னச்சாமி என்பவருடைய மனைவி லீலாவதி (வயது 38). சின்னசாமி சிலவருடங்களுக்கு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு காமேஷ் (21) என்ற மகனும், கவுசல்யா (20) என்ற மகளும் உள்ளார்கள். லீலாவதிவின் மகன் காமேஷ் கோவையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
கவுசல்யாவை, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த 26 வயதாகும் லாரி டிரைவர் பிச்சைமுத்து என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார் லீலாவதி. இதனிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கவுசல்யா, தனது கணவரை பிரிந்து சில மாதங்களாக அல்லிநகரத்தில் தனது தாயுடன் வசித்து வருகிறார். தேனியில் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். லீலாவதி தனது மகளுடன் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஒரு மாடி வீட்டில் முதல் தளத்தில் வருகிறார்கள்.
நேற்று காலை கவுசல்யா தேனியில் உள்ள ஜவுளிக்கடைக்கு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் லீலாவதி மட்டும் தனியாக இருந்தார். சரியாக காலை 9.30 மணியளவில், அவருடைய வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், கீழ் வீட்டில் வசிப்பவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் தனது முகத்தை துணியால் மூடியபடி மாடிப்படி வழியாக வெளியே வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மாடிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சமையல் அறையில் லீலாவதி படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருடைய தலை, கையில் பலத்த வெட்டுக்காயம் இருந்திருக்கிறது. இதனையடுத்து அங்கு மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தேனி அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சம்பவ இடத்துக்கு வந்து விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் ரத்தக் கறையுடன் இருந்துள்ளது. அதை போலீசார் கைப்பற்றினர். சம்பவ இடத்துக்கு கைரேகை மற்றும் தடய அறிவியல் பிரிவு போலீசார் வந்து ஆய்வு செய்தனர்.
தடய அறிவியல் துறையினர் அங்கு பதிவாகி இருந்த கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் லக்கி சம்பவம் நடந்த வீட்டுக்கு உடனே அழைத்து வரப்பட்டது. அது மோப்பம் பிடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடியது. பெரியகுளம் சாலை, அம்பேத்கர் தெரு வழியாக சுமார் 600 மீட்டர் தூரம் சுற்றிச்சென்று காந்திநகர் பகுதியில் நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து லீலாவதி உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து லீலாவதியின் மகள் கவுசல்யா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், அல்லிநகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கையில் ஒரு பையுடன் லீலாவதியின் மருமகனும் கவுசல்யாவின் கணவருமாகிய பிச்சைமுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனையடுத்து லீலாவதியை கொலை செய்து விட்டு பிச்சைமுத்து தனது சொந்த ஊருக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள். இதனையடுத்து பிச்சைமுத்துவின் வீட்டுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். பின்னர் அங்கிருந்த பிச்சைமுத்துவை மடக்கி பிடித்தனர். அதன்பிறகு அவரை விசாரணைக்காக, தேனிக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவரிடம் துருவி, துருவி விசாரணை நடந்து வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொலை சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.