பெய்ஜிங்: சீனாவில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பல ஆண்டுகள் இருந்தவர் கின் கேங் திடீரென தூக்கியடிக்கப்பட்டார். அவர் எதற்காக ஓரம்கட்டப்பட்டார் எனத் தெரியாமல் இருந்த நிலையில், அது குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. சீனாவில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் கின் கேங். இவர் கடந்த ஜூன் மாதம் முதலே எங்கு இருக்கிறதா என்றே தெரியவில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. அவருக்கு என்ன ஆனது என யாருக்குமே தெரியவில்லை.
இதற்கிடையே சீன புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக வாங் யீ என்பவரையும் கூட நியமித்தது. ஒரு பக்கம் புதிய அமைச்சரே நியமித்தாலும் கூட இத்தனை காலம் வெளியுறவுத் துறை அமைச்சரக இருந்த கின் கேங் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. மாயம்: கின் கேங் கடைசி கடந்த ஜூன் 25இல் ரஷ்ய, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளின் அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அங்குள்ள சமூக வலைத்தளமான வெய்போவில் யாராவது இது குறித்து கருத்து கூறினாலும் உடனடியாக நீக்கப்பட்டது. மேலும், கின் கேங் எங்கே எனத் தேடினாலும் "நோ ரிசல்ட்ஸ்" என்றே வருகிறது. அந்தளவுக்கு அவர் குறித்த அனைத்து தகவல்களும் நீக்கப்பட்டுள்ளன.
கின் கேங் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நெருக்கமாக இருந்தவர். அப்படியிருக்கும் போது அவருக்கு இப்படி நடந்தது பெரும் குழப்பத்தையே ஏற்படுத்துவதாக இருந்தது. இதற்கிடையே பல மாத சஸ்பென்ஸுக்கு பிறகு ஒரு வழியாக இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கின் கேங் திருமணத்தை மீறிய ஒரு உறவில் இருந்துள்ளார். அதுவும் அமெரிக்காவில் அவருக்கு இந்த உறவு இருந்துள்ளது. இந்த உறவில் அவருக்குக் குழந்தையும் இருந்துள்ளது. இது குறித்த தகவல்கள் அமெரிக்கச் செய்தி நிறுவனமான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ளது.
என்ன மேட்டர்: அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியபோது, அவருக்குத் திருமணத்தைத் தாண்டி உறவு ஏற்பட்டுள்ளது. இதில் அவர் ஒரு குழந்தைக்குத் தந்தையானதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே இது குறித்து சீன அதிகாரிகள் விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த நிலையில், இந்த விவகாரம் தேசியப் பாதுகாப்பைச் சமரசம் செய்ததா இல்லையா என்பது குறித்த விசாரணையில் சீனா இறங்கியுள்ளது.
ஏற்கனவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் சார்ந்து மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேசியப் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளாரா.. அதில் எதாவது சமரசம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விசாரணையில் சீனா இறங்கியுள்ளது. அதேநேரம் இது குறித்த கேள்விக்குச் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் இப்போது எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.
சீனா ஆக்ஷன்: ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு எப்போதும் இதுபோல திருணத்திற்கு மீறிய உறவில் இருந்த டாப் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கையே எடுத்துள்ளது. இது தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதால் இதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், வெளிநாட்டினருடன் தொடர்பில் இருக்கும் மற்ற மற்ற முக்கிய தலைவர்கள், அதிகாரிகளிடமும் கவனத்தைத் திருப்பியுள்ளது சீனா.