4 மணி நேரம்தான்! சென்னை டூ பெங்களூர் போயிடலாம்.. வந்தே பாரத் பயணிகளுக்கு காத்திருக்குது சர்ப்ரைஸ்

post-img

பெங்களூர்: சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் மிக முக்கியமான ரூட்களில் ஒன்றாக சென்னை - பெங்களூர் வந்தே பாரத் வழித்தடம் உள்ள நிலையில், இந்த ரூட்டில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க திட்டமிட்டப்பட்டுள்ள நிலையில், இதே வேகத்தில் இயக்க ரயில்வே அனுமதி கொடுக்கும் பட்சத்தில் பயண நேரம் 25 நிமிடம் மிச்சமாகும்.
தமிழகத்தில் சென்னை - நெல்லை, சென்னை - கோவை, மதுரை - பெங்களூர், சென்னை - நாகர்கோவில், சென்னை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து இயக்கப்படும் வழித்தடங்களில் மிக முக்கிய வழித்தடமாக சென்னை- பெங்களூர் ரூட் உள்ளது.
சென்னை - பெங்களூர் ரூட்: நாட்டின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையே வர்த்தகம், மருத்துவம், தொழில் நிமித்தமாக தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். இந்த ரூட்டில் அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு வரப்பிரசாதம் போல வந்தே பாரத் ரயில் அமைந்தது. சென்னை- பெங்களூர் வந்தே பாரத் ரயில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை: இந்த நிலையில் தான், சென்னை - பெங்களூர் வந்தே பாரத் ரயிலின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையே உள்ள 360 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க தற்போது 4 மணி நேரம் 25 நிமிடம் ஆகிறது. இந்த நிலையில்தான், சென்னை - பெங்களூர் ரூட்டில் முக்கிய ரயில்களின் வேகத்தை அதிகரிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

4 மணி நேரத்தில் செல்லலாம்: பெங்களூர் - ஜோலார்பேட்டை செக்‌ஷனில் தென்மேற்கு ரயில்வே இன்று சோதனை ஓட்டம் நடத்தியுள்ளது. ரயில்களின் வேகத்தை 110 கிலோ மீட்டரில் இருந்து 130 கிலோ மீட்டர் வேகமாக்க இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல் அளித்த பிறகு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது. சென்னை - பெங்களூர் ரூட்டில் வந்தே பாரத் ரயிலின் வேகம் கூட்டப்படும் பட்சத்தில் 4 மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றுவிடலாம்.
130 கிமீ வேகம்: தற்போது 4.25 மணி நேரம் ஆகும் நிலையில், பயண நேரம் 25 நிமிடம் குறையும் இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வந்தே பாரத் ரயில் மட்டும் இன்றி சென்னை - பெங்களூர் வழித்தடத்தில் சதாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் 5 மணி நேரம் வரை எடுத்துக்கொள்கிறது. இந்த ரயிலின் வேகமும் அதிகரிக்கப்பட்டால் பயண நேரம் 20 நிமிடம் வரை குறையும். கடந்த ஆண்டு சென்னை - ஜோலார்பேட்டை ரூட்டில் 130 கிலோ மீட்டர் வரையிலும் ரயிலை இயக்கும் வகையில் தரம் உயர்த்தப்பட்டது.
2 + 2 ரயில்களின் வேகம்: எனவே, பெங்களூர் - ஜோலார்ப்பேட்டை ரூட்டிலும் அதிவேகத்தில் ரயிலை இயக்க அனுமதி கிடைத்தால் மொத்த சென்னை ரூட்டும் அதிவேகத்தில் செல்லும் வழித்தடமாக மாறும். இதன் மூலம் இரண்டு வந்தே பாரத் மற்றும் இரண்டு சதாப்தி ரயில்கள் பயனடையும்.
இதனால் சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகளின் பயண நேரம் கணிசமாக மிச்சம் அடையும். வந்தே பாரத் ரயில்களை தவிர பிற விரைவு ரயில்களில் சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல சராசரியாக 5 மணி நேரம் 30 நிமிடம் வரை எடுத்துக்கொள்கிறது. சாலை வழியாக பயணம் செய்தால் சுமார் 7 மணி நேரம் வரை பிடிக்கும்.
2 வந்தே பாரத் ரயில்கள்: சென்னையில் இருந்து பெங்களூருக்கு 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2022 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூர் வரையிலும், கடந்த மார்ச் மாதம் சென்னை - பெங்களூருக்கும் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. காலை 5.50 மணிக்கு ஒரு வந்தே பாரத் ரயிலும், மாலை 5.25 மணிக்குவந்தே பாரத் ரயிலும் சென்னை செண்ட்ரலில் இருந்து கிளம்புகிறது. இந்த ரயில்கள் முறையே காலை 10.10 மற்றும் இரவு 10.25 க்கு பெங்களூர் சென்றடையும்.

Related Post