சென்னை: விரைவில் ஜெயம் ரவி நடிப்பில் 'காதலிக்க நேரமில்லை' படம் வெளியாக உள்ள நிலையில், பெண்கள் சினிமாதுறைக்கு அதிக வரவேண்டும் என்று கிருத்திகா உதயநிதி தெரிவித்திருக்கிறார்.
'வணக்கம் சென்னை' திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு அடி எடுத்து வைத்தவர் கிருத்தியாக உதயநிதி. அதே காலகட்டத்தில்தான் இவரது கணவர் உதயநிதியின் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வெளியானது. ஆக, இருவரும் சினிமா உலகில் அறிமுகமான காலம் இது. இப்போது இவரது கணவர் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி சட்டமன்றத்திற்குள் நுழைந்து துணை முதல்வராகிவிட்டார்.
இனி அரசியல் பாதைதான் என்றும் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார். அவர் விட்ட இடத்தில் இப்போது தனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறார் கிருத்திகா உதயநிதி. அவரது இயக்கத்தில் 'காதலிக்க நேரமில்லை' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஒரு மாதம் முன்னதாக, 'என்னை இழுக்குதடி' பாடல் வெளியானது. அது இதுவரை 13 மில்லியன் விவ்யூஸை எட்டி உள்ளது.
தமிழ் சினிமாவில் அதிக அளவில் பெண் இயக்குநர்கள் இல்லை. அதில் தன்னாலான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் கிருத்திகா உதயநிதி தொகுப்பாளினி டிடிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் படம் இயக்குவேன் என்பதை நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், கல்லூரி காலத்தில் ஷாட் ஃபிலிம் எடுத்திருக்கிறேன். வீட்டிலிருந்த போது கதைகளை எழுதத் தொடங்கினேன். அப்படியே உருவானதுதான் சினிமா பயணம். எதையும் திட்டமிடவில்லை" எனக் கூறியுள்ளார்.
அவரது இளமைக் காலம் பற்றிய கேள்விக்குப் பதிலளித்துள்ள கிருத்திகா உதயநிதி, "சின்ன வயதில் நான் கொஞ்சம் ஊமை குசும்பான ஆளாகத்தான் இருந்திருக்கிறேன். பள்ளியில் மிக அமைதியான பெண். கடைசி பெஞ்ச் மாணவிதான். ரேங்க் கூட கடைசிதான். சொல்லப் போனால் படிக்கவே மாட்டேன். இன்றைக்கு டிஸ்லெக்ஸியா போன்ற குறைபாடுகளைப் பற்றி மக்களுக்குத் தெரிகிறது. என் காலத்தில் அப்படி ஒரு குறை இருப்பவர்கள் பற்றிய எல்லாம் விழிப்புணர்வு இருக்கவில்லை. எனக்கும் கூட அந்தப் பிரச்சினை இருந்தது. வார்த்தைகளைத் தப்புத் தப்பாக எழுதுவேன். எனக்கு விளையாடில் ஆர்வம் இருந்தது. அதை மட்டும் ஒழுங்காகச் செய்வேன்" என வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.
எப்போதுமே தனது முகத் தோற்றத்தை ஒரே மாதிரியாகவே வைத்திருப்பது பற்றியும் கிருத்திகா பேசுகையில், "பலரும் நான் 'உம்' என்று இருப்பதைப் போன்றே காட்சி தருவதாகச் சொல்கிறார்கள். நான் வழக்கமாக இருப்பதைப் போல செம ஜாலியாகவே இருக்கிறேன். ஒருவேளை வெளியே அந்தத் தோற்றம் சரியாகப் போய்ச் சேரவில்லையோ என்னவோ" என்கிறார்.
தனது முதல் படம் வெளியானபோது சமூக ஊடகங்கள் இந்தளவுக்குப் பலமாக இல்லை. ஆனால் இப்போது பலரும் பாதி படத்திலேயே வாட்ஸ் அப் மூலம் விமர்சனம் அனுப்பிவிடுகிறார்கள் என்றும் பல வருடங்கள் கழித்து திரையரங்கில் என் படம் வெளியாக இருக்கிறது என்றும் பேசியுள்ள கிருத்திகா, ஆகவே, கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. இதுவரை வெல் சீரியஸ் மூலம் தைரியமாக இருந்து விட்டேன். இந்தப் படம் என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கப் போகிறது என்பதை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.