சென்னை: அஷ்வின் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டதாலேயே அவர் ஓய்வு பெற்று இருக்கலாம் என அவரது தந்தை ரவிச்சந்திரன் கூறிய கருத்துகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வந்த நிலையில், கிரிக்கெட் வீரர் அஷ்வின் இது தொடர்பான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த பவுலர்களில் ஒருவரான அஷ்வின் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்திருந்த நிலையில், திடீரென ஓய்வை அறிவித்துவிட்டு அவர் தாயகம் திரும்பினார். அவர் திடீரென இப்படி ஓய்வை அறிவித்தது சலசலப்பை உருவாக்கியது.
இது தொடர்பாக அஷ்வின் ஓய்வு குறித்து அவரது தந்தை ரவிச்சந்தின் அளித்த பேட்டியில், "இது எங்களுக்கு எமோஷ்னலான தருணம் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.. ஏனென்றால் அவர் கடந்த 14- 15 ஆண்டுகளாக விளையாடி வந்தார். திடீரென ஓய்வு அறிவித்துள்ளது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. அதேநேரம் அவரை தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தனர். அவரும் எத்தனை காலம் தான் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியும்? இதனால் கூட அந்த முடிவை எடுத்து இருக்கலாம்.
அவரது ஓய்வு குறித்து எங்களுக்கும் கூட கடைசி நிமிடத்திலேயே தெரிந்தது. அவர் என்ன யோசித்து திடீரென இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பது தெரியவில்லை.. ஆனாலும், நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். அவர் ஓய்வை அறிவித்துள்ளது ஒரு பக்கம் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர் தொடர்ந்து விளையாடியிருக்க வேண்டும் என்றே மற்றொரு பக்கம் மனசு சொல்கிறது. ஓய்வு அறிவிப்பில் நான் தலையிட முடியாது.. ஆனால், இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.. அது அஷ்வினுக்கு மட்டுமே தெரியும்.. தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்" என்று கூறியிருந்தார்.
அஷ்வின் தந்தை ரவிச்சந்திரனின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. பார்டர் கவாஸ்கர் தொடரில் 3 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் பிளேயிங் 11இல் ஒரு முறை மட்டுமே அஷ்வின் இருந்தார். அது மட்டுமின்றி கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்ஸ் போட்டியிலும் அவர் திடீரென அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். அது அப்போதே சர்ச்சையாகியிருந்தது.
இந்தச் சூழலில் ஓய்வு தொடர்பாக அவரது தந்தை ரவிச்சந்திரன் கூறிய இந்தக் கருத்துகள் இணையத்தில் வேகமாகப் பரவியது. அஷ்வின் போன்ற ஒரு தலைசிறந்த வீரரை இந்திய அணி இதுபோல நடத்தக்கூடாது என்று இணையத்தில் பலரும் கருத்துகளைக் கூற தொடங்கினர்.
இதற்கிடையே தனது தந்தையின் கருத்து தொடர்பாக அஷ்வினே விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஊடகத்தில் எப்படிப் பேச வேண்டும் என்ற பயிற்சி எனது தந்தைக்கு இல்லை... டேய் தகப்பா என்னடா இதெல்லாம்.. அதேநேரம் நீங்கள் (தந்தை) இப்படியொரு கருத்தைச் சொல்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை.. அவரை மன்னித்துவிடும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று விளக்கத்தைச் சற்று ஜாலியாகவே பதிவிட்டு இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கட்டாயம் பிளேயிங் 11இல் இடம் இருக்கிறது என்றால் மட்டுமே ஓகே.. இல்லையென்றால் அப்போதே அணியில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்றே அஷ்வின் அணி நிர்வாகத்திடம் கூறியிருக்கிறார். அணி நிர்வாகம் உறுதி அளித்ததாலேயே அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.