தேனி: இளையராஜா மகள் பவதாரணியின் உடலுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், இரங்கல் செய்தியையும் பதிவு செய்துள்ளார், மூத்த தலைவரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி.
பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகவே, புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சையும் மேற்கொண்டு வந்திருக்கிறார்.
சிகிச்சை: இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில், இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.. பவதாரணியின் மரண செய்தி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி போட்டுள்ளது..
விமானம் மூலம் சென்னைக்கு வரவழைக்கப்பட்ட பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.. நேற்று மாலையிலிருந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரமுகர்களும், குடும்ப உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
சொந்த ஊர்: அதற்கு பிறகு நேற்றிரவு, இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பவதாரிணியின் உடல் கொண்டுவரப்பட்டது. அங்கும் பவதாரிணி உடலுக்கு பாரதிராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தேனி எம்பி ரவீந்திரன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினார்கள்..
இறுதி சடங்கில் பவதாரணி பாடி, தேசிய விருது பெற்ற "மயில் போல பொண்னு ஒண்ணு" பாடலை அவரது குடும்பத்தினர் பாடி நிறைவு செய்தனர்... பின்னர், பவதாரணியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு முடிந்ததுமே, கார்த்திக் ராஜா, வெங்கட்பிரபு உள்ளிட்டோர் பவதாரணியின் உடலை சுமந்து வந்தனர்.. இறுதியில், உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கம்: தேனியின் லோயர் கேம்ப்பில் உள்ள இளையராஜாவின் வீட்டிலேயே, அவரின் அம்மா சின்னதாய், மனைவி ஜீவா ஆகியோரின் மணிமண்டபம் இருக்கிறது.. இங்குதான், பவதாரணியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, பவதாரிணியின் மறைவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல் வெளியிட்டிருந்தார்.. அந்த இரங்கல் குறிப்பில், "இந்திய அரசின் விருது பெற்ற திரையிசைப் பாடகரும், பெண் இசையமைப்பாளராகப் பல படங்களில் பணியாற்றியவரும், இசைஞானி இளையராஜா அவர்களின் மகளுமான பவதாரிணி அவர்கள் இளம் வயதில் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பது பெரிதும் வருந்தத் தக்கதாகும்.
ஆழ்ந்த இரங்கல்: தன்னுடைய குரலாலும், இசையாலும் தனித்த திறமையாளராகப் புகழ்பெற்ற அவரது மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவரது தந்தையார் இசைஞானி இளையராஜா, சகோதரர்கள், வாழ்விணையர் ஆகியோருக்கும் குடும்பத்தினருக்கும் நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று வீரமணி குறிப்பிட்டுள்ளார்.