அமெரிக்கா மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை இந்தியா திரும்பினார். அவரை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பல்வேறு பாஜக தலைவர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்கா வரும் அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில் கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். பின்னர் 22ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். 23ம் தேதி வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதேபோல் அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்தார். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த போது இந்தியா அமெரிக்கா இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வர்த்தகம் சார்ந்த முதலீடுகளும் இந்தியாவிற்கு வந்தன. இந்தியாவில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதாக அறிவித்தன.
இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 23ம் தேதி இந்தியர்களை சந்தித்துவிட்டு அங்கிருந்து நேராக எகிப்து சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசியின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கெய்ரோ நகரில் ரிட்ஜ் காரல்டன் ஓட்டலில் அவருக்கு எகிப்து வாழ் இந்திய மக்கள் சந்தித்து அவருக்கு மூவர்ணக்கொடிகளை அசைத்தும், "மோடி மோடி", " வந்தே மாதரம்" எனவும் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர். இரு நாடுகளின் வர்த்தக உறவு வலுவடையும் வகையில் இந்த பயணத்தின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த பயணத்தில் எகிப்துவாழ் இந்தியர்களை பிரதமர் மோடி குழு, குழுவாக சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் பிரதமர் மோடியிடம், " நீங்கள்தான் இந்தியாவின் நாயகன்" என புகழாரம் சூட்டி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்பினார். அவரை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்பட பல்வேறு பாஜக தலைவர்கள் நேரில் சென்று வரவேற்றனர். "இந்த பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு கிடைத்த மரியாதையும், கவுரவமும் ஒட்டுமொத்த தேசத்துக்குமானது" என மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.