இஸ்ரேல் - ஈரான் போர் முதல் ரஷ்யாவின் அணு ஆயுதம் வரை.. 2024ல் உலக அரசியலை உலுக்கிய விஷயங்கள்

post-img
சென்னை: உலக அரசியலில் அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் மாற்றங்கள் நடந்து வருகின்றன. உலக அளவில் பல நாடுகளில் உள்நாட்டு அரசியல் மோதலும், நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதலும் உச்சம் அடைந்துள்ளது. உலக அரசியல் நாளுக்கு நாள் பரபரப்பின் உச்சத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய அரசியலில் பல முக்கியமான சம்பவங்கள், திருப்பங்கள் நடந்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கி போர்கள் வரை பல முக்கியமான சமபவங்கள் நடந்து உள்ளன. அதிலும் சர்வதேச அரசியலையே புரட்டி போடும் விதமாக முக்கியமான சில சம்பவங்கள் நடந்துள்ளன. அதில் முக்கியமான 24 சம்பவங்களை இங்கே பார்க்கலாம். சட்டரீதியான பல சவால்கள் மற்றும் படுகொலை முயற்சிகளுக்கு இடையே விறுவிறுப்பாக நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார், இது அமெரிக்க அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அதிபரும் குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார். டொனால்ட் டிரம்ப் மெஜாரிட்டிக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இந்த தேர்தலில் 312 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 வாக்குகளை வென்று தோல்வி அடைந்தார். வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த போராட்டம் கலவரம் உள்நாட்டு போர் போல மாறிய நிலையில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அவர் நாட்டை விட்டு வெளியேறி மேற்கு வங்கத்தில் தஞ்சம் அடைந்தார். வங்கதேச பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான கனோபாபனுக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்தனர். இதையடுத்து அங்கே ஆட்சி கவிழ்ந்தது. அதோடு ஷேக் ஹசீனா டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டார். இதையடுத்து வங்கதேச நாட்டின் மூத்த ஆலோசகராக முகமது யூனுஸ் களமிறக்கப்பட்டார். இப்போது உள்ளே அங்கே மியான்மரின் அரக்கன் ஆர்மி உள்ளே நுழைந்து நாட்டை கைப்பற்றும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடம் மட்டும் மூன்றாவது முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கொலைமுயற்சி தாக்குதல் நடத்தப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போதே 2 முறை அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டு முறை நடத்தப்பட்ட கொலை முயற்சியில் இருந்தும் அவர் தப்பித்தார். இன்னும் சொல்லப்போனால் இந்த இரண்டு கொலை முயற்சி தாக்குதல்கள்தான் அவரின் வெற்றிக்கும் ஒரு காரணம். கொலை முயற்சி தாக்குதல்களை அவர் எதிர்கொண்ட விதம்.. அதன்பின் அவர் பிரச்சாரம் செய்த விதம்.. முகம் முழுக்க ரத்தத்தோடு.. அவர் கையை உயர்த்தி காட்டியது பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ஈரான் - இஸ்ரேல் போருக்கு இடையே ஈரான் அதிபர் மரணம் அடைந்தார். ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். கடந்த மே மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அவர் மரணம் அடைந்தார். இஸ்ரேல் போருக்கு இடையே ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளனாது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது. ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரையும் விபத்தில் பலியாகி உள்ளனர். ஆனால் இது கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவி வருகிறது. இந்தியாவில் 19 ஏப்ரல் முதல் ஜூன் 1, 2024 வரை ஏழு கட்டங்களாக மக்களவையின் அனைத்து 543 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. வாக்குகள் எண்ணப்பட்டு ஜூன் 4 அன்று 18வது மக்களவை அமைக்க முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக பெரும்பான்மையை இழந்தாலும் பாஜக கூட்டணியால் என்டிஏ ஆட்சியை பிடித்தது. 7 ஜூன் 2024 அன்று, பிரதமர் நரேந்திர மோடி என்டிஏவை சேர்ந்த 293 எம்.பி.க்களின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்தார். 50 வருடமாக நிலவி வந்த.. சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ந்தது. சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடினார். அங்கே ஆட்சி கவிழ ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் (HTS) என்ற போராளி குழுதான் காரணம். அல் கொய்தாவில் இளம் போராளியாக அனுபவம் பெற்ற ராணுவத் தளபதியான அபு முகமது அல்-ஜோலானி என்பவரால் HTS உருவாக்கப்பட்டது. அபு முகமது அல்-ஜோலானி அந்நாட்டின் அதிபர் ஆகி உள்ளார். சிரியாவில் 50 வருடமாக ஆசாத் குடும்பம்தான் ஆட்சி செய்து வந்தது. 1960 தொடக்கத்தில் சிரியாவில் ஒற்றை ஆட்சி முறை வழக்கத்திற்கு வந்தது. ஹபீஸ் அல் அசாத் ஆட்சியில் நிலையாக உட்கார்ந்தார். அதன்பின் அவர் மகன் ஆண்டு வந்தார். இந்த குடும்ப ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. அரசியல் நெருக்கடி காரணமாக பிரான்ஸ் அரசு கவிழ்ந்து உள்ளது. பிரான்ஸ் பிரதமர் பார்னியர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி அடைந்ததால் அரசு கவிழ்ந்தது. அதிபர் இமானுவேல் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரதமர் மைக்கேல் பார்னியர் தோல்வி அடைந்ததை அடுத்து, பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. அவர் அதிபர் இம்மானுவேல் மக்ரோனால் நியமிக்கப்பட்ட மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து உள்ளது. சர்ச்சைக்குரிய வகையில் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தியது, வரவு செலவில் முறைகேடுகளை செய்ததாக கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1962-க்குப் பிறகு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் நாட்டின் அரசாங்கம் கவிழ்வது இதுவே முதல் முறையாகும். சமீபத்தில்தான் தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தொலைக்காட்சியில் தோன்றி தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் அறிவித்தார். ஜனநாயக நாடான தென்கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன்பின் அதை அவர் வாபஸ் வாங்கினார். அவரின் அவசர நிலை அறிவிப்பிற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாததால் அவசர நிலை திரும்ப பெறப்பட்டது. அங்கே ஆட்சி கவிழும் நிலை உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது ICBM ஏவுகணைகளை ஏவி தாக்கி உள்ளது. இது அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இதை தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் அணு குண்டை வைத்து ஏவலாம். இல்லையென்றால் அணுகுண்டு இல்லாமல் ஏவ முடியும். இதை போர்க்கப்பலில் இருந்தும் கூட ஏவ முடியும். பொதுவாக இந்த ஏவுகணையை ஒரு நாடு பெரிய போரில் மட்டுமே பயன்படுத்தும். அல்லது பெரிய சோதனைகளை செய்தால் பயன்படுத்தும். அணு குண்டு சோதனைகளை மேற்கொள்ள இது போன்ற கண்டம் தண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தும். இப்படிப்பட்ட ஏவுகணையை உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தி உள்ளது. இதனால் எங்கே ரஷ்யா அடுத்து அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போக ரஷ்ய அதிபர் புடின்.. ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக அணு ஆயுத ஷெல்டர்கள்.. அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பங்கர்கள் ஆகும். இஸ்ரேல் - ஹமாஸ் - ஈரான் இடையிலான மோதல் உச்சம் அடைந்தது. ஈரானின் மிக முக்கியமான அஸ்திவாரத்தை இஸ்ரேல் நிர்மூலம் ஆகி உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்தது. சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்.. ஈரானின் ரேடார் சிஸ்டங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் மீது இஸ்ரேலின் மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. ராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதல் தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரானும் ரஷ்யாவும் தங்களுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தில் அமெரிக்க டாலரை பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. ஏற்கனவே ரஷ்யா - சீனா டாலரை புறக்கணிக்த்து கடந்த 10 வருடங்கள் ஆகிறது. இந்த நிலையில் தற்போது ஈரான் - ரஷ்யா இடையிலான வர்த்தகம் முழுமையாக டாலர் இல்லாத வர்த்தகமாக மாறி உள்ளது. ஏற்கனவே சீன - ரஷ்ய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில் 90% க்கும் அதிகமானவை ரஷ்யாவின் ரூபிள் அல்லது சீனாவின் யுவானில் நடப்பதாக மிஷுஸ்டின் கூறி உள்ளார். பொருளாதார உறவுகளில் கிட்டத்தட்ட டாலர் இல்லாத பரிவர்தனைகளையே நாங்கள் மேற்கொள்கிறோம் ரஷ்யா அறிவித்துள்ளது. புதிய பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக 2024 நவம்பர் 14 அன்று இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இலங்கையின் 16வது பாராளுமன்றம் 24 செப்டம்பர் 2024 அன்று கலைக்கப்பட்டது. இந்த தேர்தலில் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இடதுசாரி தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு மகத்தான வெற்றியாக அமைந்தது. NPP 159 இடங்களை வென்றதுமட்டக்களப்பு தவிர்ந்த அனைத்து மாவட்டங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தனிக் கட்சியொன்று அதிகப் பெரும்பான்மையைப் பெற்ற முதல் தேர்தல் இதுவாகும். உலக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் இனிமேல் இடைத்தரராக செயல்படுவதை நிறுத்துவதாக கத்தார் அறிவித்து உள்ளது. இரண்டு தரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட அமைதி பேச்சுவார்த்தைகளை கத்தார் மேற்கொண்டு வந்தது. அதை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சொல்கிறார்களே தவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வருவது இல்லை. இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு.. அமைதிக்கும் தாமாக முன்வருவது இல்லை. அவர்கள் ஆர்வம் காட்டும் போது நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதுவரை பேச்சுவார்த்தையை நடத்த நாங்கள் தயாராக இல்லை என்று அறிவித்துள்ளது. இந்த வருடம் வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு சொந்தமான தீவில் திடீரென பீரங்கி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசி வடகொரியா தாக்குதல் நடத்தி உள்ளது என்று சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமைதிக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக இருப்பதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் தென்கொரியா கூறி உள்ளது. தென் கொரியாவிற்கு சொந்தமான Baengnyeong தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் Yeonpyeong தீவு ஆகிய இரண்டு தீவுகளில் இந்த தாக்குதல் வடகொரியா மூலம் நடத்தப்பட்டு உள்ளது. 2010 ஆம் ஆண்டில் இருந்தே இந்த தீவுகளில் பதற்றம் நிலவி வருகிறது. 2010ல் இந்த தீவுகளின் மீது வடகொரியா சரமாரியாக குண்டுகள் வீசியதில் இருந்து இரு கொரியாக்களுக்கும் இடையே அங்கே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதை சுற்றி உள்ள கடல் பகுதிகளில் மிகத் தீவிரமான இராணுவ பாதுகாப்பு போடப்பட்டு கடந்த 13 ஆண்டுகளாக போர் எதுவும் நடக்காமல் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில்தான் அங்கே திடீரென வடகொரியா பீரங்கி தாக்குதல் நடத்தி உள்ளது. தென் கொரியா மற்றும் அதன் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு எதிரான போருக்கு தயாராக இருப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்தே தற்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்ஷிப் மூலம் பலன் அடைந்த பல ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஏற்கனவே விசா கிடப்பதில் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அதோடு இல்லாமல் கிரீன் கார்டு பெறுவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர். மற்ற நாட்டினருக்கு கிடைக்கும் அளவிற்கு கூட இந்தியர்களுக்கு எச்1 பி விசா தொடங்கி மற்ற விசாக்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் முறையில் மாற்றத்தை கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெற்றுள்ளது. டிரம்ப் ஆட்சிக்கு வரும் முதல் நாளே.. அதாவது ஜனவரி 20ம் தேதியே அமலுக்கு வரும் என்கிறார்கள். இந்த புதிய விதிப்படி.. அமெரிக்காவில் பிறக்கும் வந்தேறி பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு இனி ஆட்டோமேட்டிக் சிட்டிசன்சிப் கிடையாது. அதாவது இவர்களில் ஒருவர் கண்டிப்பாக அமெரிக்கராக இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் ஏதாவது ஒரு கிரீன் கார்டு அல்லது அதிகாரபூர்வ இருப்பிட சான்று வைத்து இருக்க வேண்டும். ஹமாஸ் படையின் தலைவராக இருந்த யாஹ்யா சின்வார் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்த ஹமாஸ் படை அங்கிருந்த 3 பேர் இஸ்ரேல் வீரர்களை நோக்கித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் ராணுவம் அங்கு டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் படையின் தலைவரான சின்வார் அங்குக் கொல்லப்பட்டார். சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது போஸ்டில், பிரிக்ஸ் குழு தனியாக நாணயம் ஒன்றை உருவாக்க பார்த்ததை அமெரிக்கா வேடிக்கை பார்த்த காலம் போய்விட்டது. பிரிக்ஸ் நாடுகள் புதிதாக நாணயம் எதையும் உருவாக்க கூடாது. இல்லையென்றால் ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தை பயன்படுத்த கூடாது. அமெரிக்க டாலரை மட்டுமே இவர்கள் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு 100% கூடுதல் வரி விதிக்கப்படும். அமெரிக்காவில் அவர்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் முடிவை கைவிட்டுவிடலாம். வேறு யாரவது ஏமாளி கிடைத்தால் அவர்களிடம் அவர்கள் போய் வியாபாரம் செய்யட்டும். பிரிக்ஸ் நாடுகள் சர்வதேச வியாபாரத்தில் டாலரை தவிர வேறு எதையும் பயன்படுத்த கூடாது. டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உங்களுக்கு உள்ள உறவையும் துண்டித்துக்கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். கனடாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அங்கே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டு உள்ளது. உட்கட்சி பிரச்சனை, மசோதாக்களை நிறைவேற்ற முடியாதது, சில நிதி பிரச்சனைகள் காரணமாக ஜஸ்டின் பதவி விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ட்ரூடோ ஏப்ரல் மாதத்திற்கு முன்பு ராஜினாமா செய்ய 80% வாய்ப்பு உள்ளது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கனடிய தலைவர்கள் மற்றும் அவரது சொந்த கட்சியினரிடையே கருத்துக்கள் தீவிரமாக வைக்கப்பட்டு வருகின்றன. ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்வது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறாராம். ஏற்கனவே நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கே நிதி நிர்வாகம் தொடங்கி கடன் பிரச்சனை வரை பல விஷயங்கள் தீவிரம் அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அடுத்த சில வாரங்களில் இதனால் ஜஸ்டின் ராஜினாமா செய்யலாம். கனடாவின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், நாட்டின் எதிர்காலம் குறித்து ட்ரூடோவுடன் ஆலோசனை செய்ததில்.. ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், நிதி நிலைமையில் நிலவும் சிக்கல்கள் காரணமாக தனது ராஜினாமாவை அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தில், ட்ரூடோ மீது மறைமுகமாக குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளார். கனடாவில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி இருந்தார். அவர் வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார். இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார். சீனா தைவான் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தைவானில் இருந்து ஒரு மூச்சு கூட வெளியே போகாத அளவிற்கு தைவானை சீனா தற்போது சுற்றி வளைத்து உள்ளது. தைவான் மீது சீனா எப்போது வேண்டுமானாலும் போர் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா நாட்டு படைவீரர்கள் போருக்கு தயாராக இருக்க வேண்டும்.தைவானைச் சுற்றி சீனா பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை நடத்தி வரும் நிலையில்தான்.. போர் நடத்த தயாராக இருங்கள். போர் வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள். உங்ளின் பலத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களின் போர் புரியும் திறனை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார் பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன. பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும். இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருந்தன. இந்த நாடுகள் 2024 தொடக்கத்தில் கரம் கோர்த்துள்ளன. ஜெர்மனியில் ஆட்சி கவிழ்ந்தது. ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் ஜெர்மனி அரசாங்கம் கவிழ்ந்தது. பிரான்ஸ் அரசு கவிழ்ந்த சில நாட்களில் ஜெர்மனி அரசு கவிழ்ந்துள்ளது. ஐரோப்பா நாடுகள் அண்டை நாடுகள் இடையே இந்த விவாகரங்கள் தொடர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 23. அமெரிக்காவிற்கு காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி மற்றும் பிற முக்கிய உயர் தொழில்நுட்ப பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்பதாக சீனா அறிவித்து உள்ளது. சீனாவின் செமிகண்டக்டர் பொருட்களுக்கு, நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் சீனா இந்த முடிவை எடுத்துள்ளது. கணினி சிப்-தயாரிக்கும் கருவிகள், மென்பொருள் மற்றும் உயர் அலைவரிசை சிப்புகளை தயாரிக்க காலியம், ஜெர்மானியம், ஆண்டிமனி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படும். இந்த பொருட்களைத்தான் சீனா தடை செய்துள்ளது. ஏற்கனவே 2 முறை இதேபோல் முக்கியமான தனிமங்களை, உலோகங்களை சீனா தடை செய்தது. இப்போது 3வது முறையாக முக்கியமான பொருட்களை சீனா தடை செய்தது. அமெரிக்கா செமிகண்டக்டர் துறையில் உற்பத்திகளை செய்ய முடியாமல் தடுப்பதற்கும், முக்கியமான சிப்களை செய்ய முடியாமல் தடுப்பதற்கும் வசதியாக இந்த தடைகளை செய்ய சீனா முடிவு செய்துள்ளது. 24. லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உச்சம் அடைந்தது. இதில் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியதாக புகார் வைக்கப்பட்டது. வெள்ளை பாஸ்பரஸ் மக்களையும் பொருட்களையும் எரிக்கும் தீயை உருவாக்கும் திறன் கொண்டது. நொடியில் தீயை இது உருவாக்கும். அதேபோல் நச்சுவாய்ந்த புகையை வெளியிட்டு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தும். உடனடியாக மரணத்தை கொடுக்காமல் சில நாட்களுக்கு கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தி மரணத்தை உண்டாக்கும் திறன் கொண்டது. பூச்சு கொல்லியாக இது பயன்படுத்தப்படும் இதை குண்டாக மாற்றி பயன்படுத்தும் பட்சத்தில் அது உயிரை கொடுமைப்படுத்தி கொல்லக்கூடியது. வெள்ளை பாஸ்பரஸ் மக்கள் நெரிசலான பகுதிகளில் பயன்படுத்தப்பட்டால், அது கடுமையான தீக்காயங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் கடுமையான நோய்களை உண்டாக்கும். முக்கியமாக குழந்தைகள் மூச்சு திணறி, நுரை தள்ளி மரணம் அடையும் ஆபத்துகளும் உள்ளன.

Related Post